ODI WC Qualifier | சிக்கந்தர் ரசா அதிவேக சதம்: 315 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டிய ஜிம்பாப்வே

By ஆர்.முத்துக்குமார்

ஹராரே: ஹராரே நகரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று ஆட்டங்களின் குரூப் ஏ போட்டியில் சிக்கந்தர் ரசா, 54 பந்துகளில் 6 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 102 ரன்கள் விளாசி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சத சாதனை படைத்தார். இதன் மூலம் நெதர்லாந்து குவித்த 315 ரன்கள் என்ற இமாலய இலக்கை 40.5 ஓவர்களில் அனாயசமாக விரட்டி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ரன்கள் என்று ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.

இதோடு பவுலிங்கிலும் அசத்திய சிக்கந்தர் ரசா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். டாஸ் வென்று முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணியில் விக்ரம் ஜித் சிங் (88), மாக்சோ டவுட் (59), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (83) ஆகியோர் அட்டகாசமாக ஆட கடைசியில் இறங்கிய சகிப் சுல்பிகர் 31 பந்துகளில் 34 ரன்கள் விளாச ஸ்கோர் 315 ரன்களை எட்டியது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ரசா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜிம்பாப்வேயிற்கு இது பெரிய இலக்குதான் ஏனெனில் நெதர்லாந்து பந்து வீச்சு பலமானது என்பதை நாம் டி20 உலகக் கோப்பையிலேயே பார்த்தோம். லோகன் வான் பீக், அர்யான் தத், பாஸ் டி லெடே போன்றவர்கள் நன்றாக வீசக் கூடியவர்கள், ஆனால் நேற்று ஜிம்பாப்வே பேட்டிங் இவர்களை முறியடித்து விட்டது. முக்கியக் காரணம் ஜிம்பாப்வேயின் ஷான் வில்லியம்ஸ், 58 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 91 ரன்களை வெளுத்து வாங்கி விட்டார்.

முன்னதாக தொடக்க வீரர்களான ஜாய்லார்ட் கும்பீ 40 ரன்களையும், கிரெய்க் எர்வின் 50 ரன்களையும் அடித்து 13.3 ஓவர்களில் 80 ரன்கள் என்ற நல்ல தொடக்க அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். 24.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் என்ற நிலையில் ஜிம்பாப்வே 7 ரன்கள் பக்கம் ரன் ரேட்டில் சென்று கொண்டிருந்தது. ரசா 25-வது ஓவரில்தான் களம் இறங்கினார். முன்னதாக ஷான் வில்லியம்ஸ் 17 மற்றும் 21ம் ஓவர்களுக்கிடையே 48 ரன்களைக் குவித்து உத்வேகம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், நெதர்லாந்தும் விட்ட கேட்ச்களை எண்ணி வருந்தி இருப்பார்கள். வில்லியம்ஸ் மற்றும் ரசா அடிக்க ஆரம்பித்தவுடனேயே நெதர்லாந்து பந்து வீச்சு பஞ்சுப் பஞ்சுப் பஞ்சாய் உதிர்ந்தது. ஷான் வில்லியம்ஸ்தான் இதற்கு முன்னர் ஜிம்பாப்வே அணிக்காக அதிவேக ஒருநாள் சத சாதனையை வைத்திருந்தார். அவர் நேபாளத்துக்கு எதிராக இதே தொடரில் 70 பந்துகளில் சதமெடுத்து சாதனையை புரிந்தார். நேற்று இதை ரசா 54 பந்துகள் சதத்தினால் முறியடித்தார்.

இன்னிங்ஸின் 39-வது ஓவரில் ரசா, தன் 8 சிக்சர்களில் 3 சிக்சர்களை தொடர்ச்சியாக விளாசினார். பவுலிங்கிலும் அசத்தினார். ஆனால், நெதர்லாந்து ஆட்டத்தை சாதாரணமாக எடை போட முடியாது. மதிக்கக் கூடிய ஒரு எதிரணியாக நெதர்லாந்து ஆடியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE