ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய கால்பந்து அணி நிதியுதவி

By செய்திப்பிரிவு

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் இந்திய கால்பந்து அணி சுமார் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று இந்திய அணி இன்டர்கான்டினென்டல் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இந்திய அணி இதனை தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 46-வது நிமிடத்திலும், லாலியன்ஷுவாலா ஷாங்க்டே 66-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

இந்நிலையில், தங்களுக்கு கிடைத்த பரிசுத் தொகையில் 20 லட்சம் ரூபாயை ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்க இந்திய வீரர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர். இதற்கு அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய அணி ட்வீட் செய்துள்ளது.

“நாங்கள் வெற்றி பெற்றதற்காக ஒடிசா அரசு எங்களுக்கு அளித்துள்ள பரிசுத் தொகைக்கு நன்றி. அந்த பரிசுத் தொகையில் 20 லட்சம் ரூபாயை நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்காக வழங்குகிறோம். இது அணியின் கூட்டு முடிவு” என ட்வீட் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கி இருக்கும் இந்த கோர விபத்து குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (சிபிஐ) மேற்கொண்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE