பாட் கம்மின்ஸ், நேதன் லயன் என்னும் அற்புதன்கள்: அட்டகாசமான நிலையில் ஆஷஸ் முதல் டெஸ்ட்!

By ஆர்.முத்துக்குமார்

இங்கிலாந்து வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவை, ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை. இதைவிட என்ன வேண்டும் ஒரு டெஸ்ட் போட்டி அதன் அத்தனை விறுவிறுப்புகளுடனும் தரத்துடனும் மிளிர. அதுவும் பாஸ்பால் பாணியில் இங்கிலாந்து தன் 2வது இன்னிங்ஸை நேற்று தொடர்ந்து ஆட முயல அட்டகாசமாக வீசினார்கள் நேதன் லயனும், கேப்டன் பாட் கம்மின்ஸும்.

ஒரு பதற்றமும் இல்லாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் பந்து வீசினர். இங்கிலாந்து 273 ரன்களுக்குச் சுருண்டது. அதுவும் ஆட்டம் தொடங்கி பாட் கம்மின்ஸ் வீசிய முதல் பந்தையே ஜோ ரூட் ரிவர்ஸ் ஷாட் ஆட முயன்றார். அவரால் ஷாட்டை கனெக்ட் செய்ய முடியவில்லை என்றாலும் இது ஆஸ்திரேலியாவுக்கு புதிதான ஒரு அதிர்ச்சியே. இந்த ஷாட் முயற்சி என்ன செய்ததென்றால், பாட் கம்மின்ஸை அட்டாக் பாணியிலிருந்து களவியூகத்தைப் பரவலாக்கச் செய்தது. ஏனெனில் ரூட் ஸ்காட் போலண்டை ரிவர்ஸ் ஸ்கூப் ஆடவே செய்தார். ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் முதல் 3 ஓவர்களில் 32 ரன்கள் வந்தது.

இந்திய கேப்டனாக இருந்தால் நிச்சயம் அரண்டு போய் செய்வதறியாது திகைத்திருப்பார். அஸ்வின் போன்ற ஒரு பவுலர் நிச்சயம் இத்தகைய சூழ்நிலைகளை கட்டுக்குள் கொண்டு வருவார். ஆஸ்திரேலியாவில் நேதன் லயன் இருந்தார். நிதான கேப்டன் பாட் கம்மின்ஸ் இருந்தார். இங்கிலாந்து 2வது இன்னிங்சில் மொத்தமே 66.2 ஓவர்கள்தான் ஆடியது. இதில் பாட் கம்மின்ஸ் 18.2 ஓவர்களில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் நேதன் லயன், 24 ஓவர்களில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதாவது இருவரும் 42.2 ஓவர்களை வீசி 143 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஃபிளாட் பிட்சில் இது ஒரு மிகப் பெரிய பந்து வீச்சு என்றுதான் கூற வேண்டும்.

அதுவும் பாட் கமின்ஸ், ஆலி போப் விக்கெட்டை எடுத்த பந்து அற்புதத்திலும் அற்புதம். துல்லிய இன்ஸ்விங்கிங் யார்க்கர் அது, குச்சியைப் பெயர்த்தது. அடுத்ததாக முக்கியமான விக்கெட்டைக் காலி செய்தார் நேதன் லயன். ஜோ ரூட், லயன் பந்தை இறங்கி வந்து மைதானத்துக்கு வெளியே அடிக்கும் ஆக்ரோஷத்துடன் சுற்றினார், ஆனால் பந்து அவரை பீட் செய்து விக்கெட் கீப்பரிடம் செல்ல ஸ்டம்ப்டு ஆனார். 11,000 ரன்கள் மைல்கல்லை எட்டியபிறகு ஜோ ரூட் தன் வாழ்நாளில் முதல் முறையாக ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழந்ததுதான் ஆச்சரியம்.

களவியூகத்தைப் பரவலாக்கி ஹாரி புரூக்கை கட்டிப்போட்டனர். அவர் 52 பந்துகளில் 70 அடிப்பவர் 46 ரன்களில் நேதன் லயன் பந்தை கவரில் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், இதுவும் நிறுத்தி வைத்து எடுத்த விக்கெட். பென் ஸ்டோக்ஸ் அபாயகரமாக ஆடத் தொடங்கியிருந்த நேரம். கம்மின்ஸை இறங்கி வந்து ஒரு ஆன்-ட்ரைவ் பவுண்டரியும், அடுத்த பந்தை ஒரு அப்பர் கட் பவுண்டரியும் அடித்தார், ஆனால் பாட் கம்மின்ஸின் தீராத தாகம் நிறைந்த பவுலிங்கிற்கு எல்.பி.ஆகி வெளியேறினார் பென் ஸ்டோக்ஸ். ஜானி பேர்ஸ்டோ அதிரடி வீரர், ஆனால் அவரை 39 பந்துகள் நிற்க வைத்து தட்டுத்தடுமாறச் செய்து 20 ரன்களில் வீழ்த்தினார் லயன். லைனில் வந்த பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி சிக்கினார் பேர்ஸ்டோ.

நேதன் லயன் 500 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் எடுத்து விடுவார், இப்போது 494 விக்கெட்டுகளில் இருக்கிறார். அடுத்த லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்த மைல்கல்லை எட்டினார் என்றால் ஆஸ்திரேலியாவுக்காக 100 டெஸ்ட்களில் தொடர்ந்து ஆடிய சாதனையை நிகழ்த்துவார். நம்மூரில் அஸ்வின் எப்படி நடத்தப்படுகிறார், அங்கு லயன் எப்படி நடத்தப்படுகிறார் என்பதிலிருந்தே எந்த கிரிக்கெட் தொழில் நேர்த்தியான கிரிக்கெட் என்பது புரியும்.

ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சையும் குறிப்பிட வேண்டும். ராபின்சன் ஒரு அருமையான பந்தில் வார்னரை வெளியேற்ற மார்னஸ் லபுஷேன் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களில் இருந்த போது முதல் இன்னிங்ஸ் போலவே பிராட் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்து ஸ்விங் செய்ய எட்ஜ் செய்து கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து மிக முக்கியமாக அற்புதமான பந்து ஒன்றில் ஸ்மித்தின் எட்ஜையும் பிடித்தார் பிராட். ஸ்மித்தும் 6 ரன்களில் அவுட். விக்கெட் இழப்பின்றி 61 ரன்களில் இருந்த ஆஸ்திரேலியா 107 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸ் சத நாயகன் உஸ்மான் கவாஜா 34 ரன்களுடனும், இரவுக்காவலன் ஸ்காட் போலண்ட் 13 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இன்று 5வது நாள் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சமாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்