திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வென்றது. முதலில் பேட் செய்த சீகம் மதுரை பேந்தர்ஸ் 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் எஸ்.கார்த்திக் 4 ரன்களில் சரவணகுமாரின் வேகத்தில் ஆட்டமிழக்க, அதன் பின் 2-வது விக்கெட்டிற்கு கேப்டன் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் கவுஷிக் இணைந்து நிதானமாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தனர். முக்கியமான தருணத்தில் ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் சிறப்பாக விளையாடி வந்த ஜெகதீசன் கவுஷிக் 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை வருண் சக்கரவர்த்தியிடம் பறிகொடுத்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களில் ரவிச்சந்திரன் அஷ்வினின் சுழலில் ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்வப்னில் சிங் 0, தீபன் லிங்கேஷ் 9, சுதன் 0 ரன்களில் நடையைகட்டினர். முருகன் அஸ்வின்
10, அபிஷேக் 1, தேவ் ராகுல் 14 ரன்கள் சேர்த்து வெளியேறினர். திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்களான சுபோத் பாட்டீ, சரவணகுமார் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
124 ரன்கள் இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கிய நிலையில் ஷிவம் சிங் 9, விமல் குமார் 6, அருண் 3 ரன்களில் குர்ஜப்நீத் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த போதிலும் 4-வது விக்கெட்டிற்கு பாபா இந்திரஜித்துடன் இணைந்து ஆதித்யா கணேஷ் அணியை சரிவிலிருந்து மீட்டார்.
பாபா இந்திரஜித் 48 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 78 ரன்களும், ஆதித்யா கணேஷ் 22 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்களும் சேர்க்க திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 35 பந்துகளை மீதம் வைத்து 14.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.
மதுரை பேந்தர்ஸ் அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.
தோல்விக்குப்பின் சீகம் மதுரை பேந்தர்ஸின் கேப்டன் சி.ஹரி நிஷாந்த் கூறுகையில், “எங்களது பேட்டிங் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. இந்த மாதிரியான விக்கெட்டில் நிலைத்து நின்று விளையாடி இன்னும் அதிகமான ரன்களைப் பெற்றிருந்தால் எதிரணியை வீழ்த்தியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் ஆனால் அதை எங்களது பேட்ஸ்மேன்கள் செய்யத் தவறிவிட்டனர்” என்றார்.
சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு இன்னும் 5 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் 4 வெற்றிகளை குவித்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து அந்த அணியின் முதன்மை செயல் அதிகாரி மகேஷ் சுப்ரநேயன் கூறும்போது, “பேட்டிங்கில் தொடக்கத்தில் விக்கெட்டை இழந்து பின்னடைவாக அமைந்தது. முக்கியமான கட்டத்தில் ஹரி நிஷாந்த் வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. ஒரு கட்டத்தில் 78 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்தோம். ஆனால் அதன் பின்னர் 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்துவிட்டோம்.
பந்து வீச்சின் போது சிறப்பாக தொடங்கினோம். 31 ரன்களுக்குள் 3 விக்கெட்களை வீழ்த்தினோம். முருகன் அஸ்வின் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் செய்து எஸ்.அருணை வெளியேற்றினார். இருந்த போதிலும் பாபா இந்திரஜித் அற்புதமான கூட்டணி அமைத்து வெற்றியை அவர்கள் பக்கம் கொண்டு சென்றுவிட்டார்.
வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் 26 ரன்களை விட்டுக்கொடுத்தார். பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் நாங்கள் முன்னேற்றம் காணவேண்டும். எங்களுக்கு இன்னும் 5 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் 4-ல் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெறுவோம். அடுத்த ஆட்டத்தில் 24ம் தேதி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை சந்திக்கிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago