ஜீனியஸ் மெஸ்ஸியின் மேஜிக் ஹாட்ரிக்: உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினா அணியை அழைத்துச் சென்றார்

By ஆர்.முத்துக்குமார்

ஈக்வடார் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியின் நம்பமுடியாத, அதிசயிக்கத்தக்க ஹாட்ரிக் சாதனையுடன் 3-1 என்று வெற்றி பெற்று அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.

பிரேசில், உருகுவே, கொலம்பியா அணிகளுடன் 6-ம் இடத்திலிருந்து நேரடியாக உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினாவை அழைத்துச் சென்றார் மெஸ்ஸி.

குவிட்டோவில் ஈக்வடாரை வெற்றி பெற்றால்தான் நேரடி தகுதி சாத்தியம் என்ற நெருக்கடியில் களமிறங்கியது அர்ஜெண்டினா. நிச்சயம் மெஸ்ஸிக்கு கூடுதல் பதற்றமே. காரணம் தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டால் அத்தனை விமர்சனங்களும் அவர் மேல் விழுந்திருக்கும்.

ஆனால் அங்குதான் சாதாரண வீரர்களுக்கும் ஜீனியஸ்களுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது, தேவையான தருணத்தில் தன் ஆட்டத்தை பலமடங்கு உயர்த்தும் திறமை ஜீனியஸ்களின் தனித்துவம், இன்று மெஸ்ஸி அதைத்தான் நிரூபித்தார். 3 கோல்களுமே திகைக்க வைக்கும் திறமை கோல்கள். 3 கோல்களிலுமே குறைந்தது 3-4 ஈக்வடார் வீரர்கள் அவரை முறியடிக்க புடைசூழ்ந்தனர் அதனையும் மீறி புலிபோல் பாய்ந்தார், புலிபோல் அவரது கண்கள் தன் இரையான கோலைத் தவிர வேறு எதிலும் இல்லை. இந்த ஆட்டத்தில் இவருக்கும் சக வீரர் டிமரியாவுக்கும் இடையே டெலிபதியோ என்று வியக்கும் அளவுக்கு புரிதல் கூட்டணி அமைந்தது.

இதில் ஆட்டம் தொடங்க விசில் அடிக்கப்பட்டவுடன் விசில் முடிவதற்குள் கோலோ என்று வியக்கும் வண்ணம் ஈக்வடார் 40-வது விநாடியில் கோலை அடித்து அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சியளித்தது. கிக் ஆஃபிலிருந்து நேரடியாக கோல்!! ஈக்வடாரின் ஆர்டோனேசும், ரொமாரியோ இபராவும் ஒன் டு ஒன் என்று மாறி மாறி தலையால் பந்தை அடித்து கோல் அருகே கொண்டு சென்றனர், பிறகு சற்றும் எதிர்பாராமல், அர்ஜெண்டினா தடுப்பாட்ட வீரர்கள் சுதாரிப்பதற்குள் ஈக்வடார் வீரர் ரொமாரியோ இபரா இடதுகாலால் உதைத்த உதையில் பந்து அர்ஜெண்டினா கோல் கீப்பர் ரொமீரோவைத் தாண்டி கோலுக்குள் சென்றது ஈக்வடார் 1-0 என முன்னிலை பெற்றது. இந்தக் கோலுக்குப் பிறகு ஒரு தேசத்தின் சுமையையும் கனவையும் தன் மேலே சுமத்திக் கொண்டு, சர்வதேச கால்பந்தில் மிகவும் நெருக்கடியான தருணத்தில் அதி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனிநபர் சாதனை மெஸ்ஸியுடையது என்றால் மிகையாகாது.

ஈக்வடார் கோலுக்குப் பிறகு 7-வது நிமிடத்தில் மெஸ்ஸி அருமையாக ஒரு பாஸை டிமரியாவுக்கு அடித்தார், பக்கவாட்டு பாத உதையில் டிமரியா ஷாட் வைடாகச் சென்றது. 9-வது நிமிடத்தில் டிமரியாவின் ஷாட் ஒன்று கோல் வலைக்கு மேலே பட்டுத் திரும்பியது, 10-வது நிமிடத்தில் டிமரியாவின் இன்னொரு அபாரமான கிராஸும் கோலாக மாறவில்லை, மெஸ்சியும், மரியாவும் அபாயக் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்தனர். ஈக்வடாரு சும்மா இல்லை, 11-வது நிமிடத்தில் ராமிரேஸ் 35 அடியிலிருந்து கோலை நோக்கி அடித்த முயற்சி அர்ஜெண்டினா கோல் கீப்பர் ரொமீரோவினால் பிடிக்கப்பட்டது.

‘புலி’ மெஸ்ஸியின் அற்புதத்திற்காகக் காத்திருந்த 3 கணங்கள்!

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பாஸ் ஒன்று மெஸ்ஸியிடம் வர அதனை மிக அழகாக தனக்கு இடது புறத்தில் முன்னால் இருந்த டிமரியாவிடம் துல்லியமாக பாஸ் செய்து விட்டு தன்னை விடுவித்துக் கொள்வது போல் விடுவித்துக் கொண்டு மெஸ்ஸி கோல் அருகில் டிமரியாவுக்கு வலது புறம் வந்தார். டிமரியா மெஸ்ஸிக்கு துல்லியமான ஒரு பாஸைச் செய்ய ஆபத்தை உணர்ந்த ஈக்வடார் கோல் கீப்பர் பேங்குயெரா முன்னேறி வர மெஸ்ஸியின் பாதம் பந்தை கோலுக்குள் தள்ளியது. கொண்டாட்டம் தொடங்கியது. பந்தை நிறுத்தி அதை டிமரியாவுக்கு அடித்த அழகு அதிசயிக்க வைக்கும் அழகு.

ஒவ்வொரு முறை மெஸ்ஸியிடம் பந்து வரும்போதும், ஈக்வடார் வயிற்றில் புளியைக் கரைத்தது, 16-வது நிமிடத்தில் இரண்டு தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து இடது புறம் நகர்ந்தார் மெஸ்ஸி. பிறகு ஒரு சக்தி வாய்ந்த ஷாட் ஆனால் இம்முறை ஈக்வடார் கோல் கீப்பர் சுதாரித்தார்.

இப்படியே ஆடிக்கொண்டிருந்த போதுதான் 21-வது நிமிடம் மெஸ்ஸிக்காக காத்திருந்தது. மீண்டும் டிமரியோவிடம் பந்து வர அவர் 2 வீரர்களை வெட்டி பந்தை மெஸ்ஸிக்கு அனுப்ப பந்தை அவர் மீண்டும் குவியும் ஈக்வடார் தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து அவர்கள் தங்கள் கால்களை மெஸ்சியின் காலுக்குள் விடுவதற்குள் மெஸ்ஸி இடது காலால் சக்தி வாய்ந்த ஒரு ஷாட்டை கோலுக்குள் அடித்தார், அர்ஜெண்டினா 2-1 என்று முன்னிலை பெற்றது. ஈக்வடார் கோல் கீப்பருக்கு வாய்ப்பேயில்லை என்ற ஷாட் ஆகும் இது.

32-வது நிமிடத்தில் டெலிபதி போல் செயல்பட்ட இருவரது மனங்களும் மீண்டும் ஒரு கூட்டணி அமைத்தது. மெஸ்ஸி அடித்த ரிடர்ன் பாஸை டிமரியா அருகிலிருந்து கோலை நோக்கித் தாக்க இம்முறை ஈக்வடார் கோல் கீப்பர் பாங்யெரா அருமையாகத் தடுத்தார்.

35-வது நிமிடத்தில் ஈக்வடார் கோல் கிங் ரொமாரியோ இபரா அடித்த கார்னர் ஷாட்டை ரொமீரோ தட்டி விட மீண்டும் கார்னர் ஆனால் இது கோல் அச்சுறுத்தல் ஏற்படுத்தவில்லை. இடைவேளையின் போது அர்ஜெண்டினா 2-1 என்று முன்னிலை பெற்றது.

ஆட்டம் தொடங்கிய போது டிமரியா மீண்டும் அபாரமாக ஆட அதில் கார்னர் கிடைத்தது, ஆனால் கோல் முயற்சி விரயமானது. 2-1 என்ற நிலையில் அர்ஜெண்டினா 3-ம் இடத்தில் இருந்தது, ஒருவேளை ஈக்வடார் சமன் கோலை அடித்திருந்தால் அர்ஜெண்டினா மீண்டும் 6-ம் இடத்துக்குச் சென்றிருக்கும்.

ஈக்வடார் கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆடியது, ஆனால் அந்த அணியை அர்ஜெண்டின தடுப்பாட்ட வீரர்கள் பின்னுக்குத் தள்ளியபடியே இருந்ததோடு மெஸ்ஸியின் புலிக்கண்கள் தன் இலக்கைக் குறிவைத்துக் கொண்டேயிருந்தது.

அப்போதுதா 62-வது நிமிடம் மெஸ்ஸியின் அதிஅற்புத ஹாட்ரிக் கோல் கணத்திற்காகக் காத்திருந்தது. தளர்வான ஒரு பாஸ் 35 அடியில் மெஸ்ஸிக்கு வந்தது.

மெஸ்ஸி பந்தை மின்னல் வேகத்தில் கோலை நோக்கி எடுத்துச் செல்ல ஈக்வடார் வீரர்கள் அவரை இடித்துத் தள்ளவோ அவரது கால்களுக்குள் தங்கள் கால்களை விடவோ நெருக்கமாக வந்து கொண்டிருந்தனர், மெஸ்ஸியின் பாலன்ஸ் கூட தவறியது, அவரை இழுத்து விடவோ, கால்தட்டுப்போடவோ முயன்றனர், ஆனால் அந்தக் கால்தட்டு நடக்கும் ஒரு விநாடிக்கும் கீழான நேரத்தில் மெஸ்ஸி மிக மெஜஸ்டிக்காக பந்தை ஈக்வடார் கோல் கீப்பருக்கு பிடிக்க எந்த வாய்ப்பும் இல்லாமல் கோலுக்குள் தூக்கி அடித்தார். இது உண்மையில் ஜீனியஸ் மட்டுமே அடிக்கக் கூடிய கோலாகும். எப்போதுமே மெஸ்ஸி மார்க் செய்யப்பட்டிருந்தார்.

எப்போதுமே அவர் பந்தைக் கொண்டு செல்லும் போது கீழே தள்ள, கால்தட்டுப் போட ஆட்கள் இருந்து கொண்டேயிருக்கின்றனர், ஆனால் அவற்றையெல்லாம் மீறியும் அவர் புலிபோல் தன் மின்னல் வேகத்தினால் அவர்களை புறக்கணித்து வெற்றி காண்கிறார்.

ஆட்டத்தின் 79-வது நிமிடத்திலிருந்து 10 நிமிடங்களுக்கு ஈக்வடார் ஆதிக்கம் இருந்தது, 79வது நிமிடத்தில் ராமிரேஸ் கிராஸை பதிலி வீரர் எஸ்ட்ராடா கோலுக்கு மேலே அடித்து வீணடித்தார். கடைசியில் அர்ஜெண்டினா மெஸ்ஸியினால் உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. கால்பந்து ரசிகர்கள் மனதில் இந்த ஆட்டம் விட்டு நீங்கா இடம்பிடித்திருக்கும்.

பிளே ஆஃப் சுற்றில் பெரூ அணி, நியூஸிலாந்து அணியை இரண்டு சுற்றுகளில் எதிர்கொள்கிறது. இதில் பெரூ வெற்றி பெற்றால், 1982-க்குப் பிறகு உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்