இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

By செய்திப்பிரிவு

புவனேஷ்வர்: நடப்பு இன்டர்கான்டினென்டல் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய அணி. இறுதிப் போட்டியில் லெபனான் அணியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளது இந்தியா. 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 4 நாடுகள் பங்கேற்ற இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதல் இரு லீக் ஆட்டங்களிலும் மங்கோலியா, வனுவாட்டு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தில் லெபனானுடன் போட்டி டிராவில் முடிந்தது.

இன்று (ஞாயிறு) இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் லெபனான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் லாலியன்ஸுவாலா சாங்டே ஆகியோர் தலா ஒரு கோல் பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், இரண்டாவது பாதியில் இந்தியா 2 கோல்களை பதிவு செய்து அசத்தியது. பிஃபா தரவரிசையில் லெபனான் 99-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் இந்திய அணி 101-வது இடம் வகிக்கிறது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளார் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE