TNPL 2023 | ஒரே பந்தில் இரண்டு முறை டிஆர்எஸ் ரிவ்யூ செய்யப்பட்ட வினோதம்

By செய்திப்பிரிவு

கோவை: நடப்பு டிஎன்பிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் பால்சி திருச்சி மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரு அணி தரப்பில் இருந்தும் ஒரே பந்துக்கு இரண்டு முறை டிஆர்எஸ் முறையீடு அடுத்தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

கோவையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸின் 13-வது ஓவரை திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் வீசி இருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை ராஜ்குமார் எதிர்கொண்டார். ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் கேரம்-பாலை வீசினார் அஸ்வின்.

பந்து பேட்டில் பட்டது போல இருந்தது. அதனால் கள நடுவர் அவுட் கொடுத்தார். அதை திருச்சி அணி ரிவ்யூ செய்தது. அதில் பந்து பேட்டில் படவில்லை எனவும், பேட் தரையில் பட்டதால் ஸ்பைக் இருந்தது எனவும் டிவி நடுவர் ரிவ்யூவில் தெரிந்தது. அதனால் நாட்-அவுட் என கொடுக்கப்பட்டது. அடுத்த நொடியே துளியும் தாமதிக்காமல் அஸ்வின், அதே பந்துக்கு மீண்டும் டிஆர்எஸ் கேட்டார். அதன்படி அது மீண்டும் ரிவ்யூ செய்யப்பட்டு நாட்-அவுட் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய அஸ்வின், 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 26 ரன்கள் கொடுத்திருந்தார். 1 மெய்டன் ஓவரையும் அவர் வீசி இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE