தங்கப் பந்து விருதுக்கு மெஸ்ஸி தகுதியானவர் அல்ல: மரடோனா கருத்தால் பரபரப்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்க பந்து விருதுக்கு லயோனல் மெஸ்ஸி தகுதியானவர் அல்ல என்று அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் டிகோ மரடோனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு தங்க பந்து விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அர்ஜென்டீனா கேப்டன் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெஸ்ஸிக்கு தங்கப் பந்து விருது வழங்கிய சர்வதேச கால்பந்து கூட்டமைப்புக்கு (ஃபிபா) அர்ஜென்டீனா முன்னாள் கேப்டன் டிகோ மரடோனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:

லயோனல் மெஸ்ஸி எதையாவது வென்றாக வேண்டும் என்று கால்பந்தை வைத்து வியாபாரம் நடத்தும் சிலர் நினைத்தார்கள். எனவேதான் அவருக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக அவர் தங்க பந்து விருதுக்கு தகுதியானவர் அல்ல. அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது நியாயமற்றது. இந்த உலகக் கோப்பையில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ்தான் சிறந்த வீரர். நியாயமாக அவருக்குத்தான் இந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

மரடோனா தலைமையில் 1986–ம் ஆண்டு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றது. அப்போது அவர் தங்கப் பந்து விருதையும் பெற்றார். இந்த முறை அர்ஜென்டீனா உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தால் மரடோனாவுக்கு இணையான புகழை மெஸ்ஸி பெற்றிருப்பார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி 4 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். போஸ்னியா, ஈரான், ஸ்விட்சர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த கோல்களால்தான் அர்ஜென்டீனா வெற்றி பெற்றது. அர்ஜென்டீனாவை இறுதி ஆட்டம் வரை அழைத்து வந்த பெருமையும் மெஸ்ஸியை சேரும்.

3 லீக் ஆட்டங்களில் அர்ஜென்டீனா மொத்தம் 6 கோல்களை அடித்தது. இதில் 4 கோல்கள் மெஸ்ஸி அடித்ததாகும்.நெதர்லாந்தின் அர்ஜென் ராபென், பிரேசிலின் நெய்மார், அர்ஜென்டீனாவின் டி மரியா, மஸ்சரானோ, ஜெர்மனி வீரர்கள் தாமஸ் முல்லர், குரூஸ், பிலிப் லாம், ஹமெல்ஸ் ஆகியோரும் தங்கப் பந்து விருதுக்கான பட்டியலில் இருந்தனர்.

என்னும் கேப்டனாகவும், அணியில் ஒரு வீரராகவும் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய மெஸ்ஸிக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டது. இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த வருத்தத்தில் இருந்த மெஸ்ஸி ஆர்வம் இல்லாமல்தான் இந்த விருதை பெற்றார். உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத ஏமாற்றத்தில் இருந்த மெஸ்ஸி, இதுபோன்ற விருதுகள் எனக்கு ஆறுதல் அளித்துவிடாது என்றும் கருத்து தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE