சாதிப்பதற்கு உடல் குறைபாடு தடை அல்ல‌ - மனம் திறக்கும் பாரா நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன்

By இரா.வினோத்


இந்திய பாரா நீச்சல் போட்டிகளின் புதியமுகம் நிரஞ்சன் முகுந்தன். ஏழு வயதுவரை எழுந்து நிற்க கூட முடியாமல் இருந்த அவர் இன்று சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வாரி குவிக்கிறார். 19 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளஅவர் இதுவரை 75 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, ஓயாமல் வெளிநாடுகளுக்கு பறந்துக் கொண்டிருக்கும் நிரஞ்சன் முகுந்தனை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

எங்கள் குடும்பத்தின் பூர்வீகம் தமிழகம் என்றாலும் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில்தான். எனக்கு முதுகு தண்டுவடம் முழுமையாக வளர்ச்சி அடையாததால் பிறக்கும்போதே ‘ஸ்பைன் பைஃபிடா' என்ற குறைபாட்டுடன் பிறந்தேன். பொதுவாக இந்த பிரச்சினை இருப்பவர்களுக்கு மூளை அல்லது உடலில் குறைபாடு ஏற்படும். எனக்கு இடுப்புக்குகீழே இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடக்க முடியாது. நகரக் கூட முடியாது. 7 வயது வரை என் பெற்றோரின் துணையுடன்தான் ஒவ்வொரு இடத்துக்கும் நகர்ந்தேன். ஆனால் எல்லோரையும் போல நானும் இருக்க விரும்பியதால், சாதாரண பள்ளியிலேயே படித்தேன்.

பிறகு எப்படி நீந்த ஆரம்பித்தீர்கள்?

7 வயதிருக்கும்போது டாக்டர் தீபக் ஷரன் என்பவர் என்னை பரிசோதித்த பின்னர், அக்வா தெரபியாக நீச்சல், குதிரை ஏற்ற வகுப்பில் சேர்த்துவிடுமாறு அறிவுரை வழங்கினார். எனது பாட்டி சாந்தா எனது பெற்றோரை சமாதானம் செய்து நீச்சல் வகுப்பில் சேர்த்துவிட்டார். ஜெயநகர் நீச்சல் குளத்தில் முதன் முதலாக நீருக்குள் இறக்கிவிட்ட போது சுதந்திரம் அடைந்ததைப் போல உணர்ந்தேன். முதல் முறையாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு யாருடைய துணையும் இல்லாமல் நகர்ந்தேன்.

சிகிச்சைக்காக நீச்சல் குளத்துக்கு சென்ற நீங்கள் எப்படி விளையாட்டு வீரராக மாறினீர்கள்?

முதல் வாரத்தில் அரை மணி நேரம் நீச்சல் குளத்தில் நீந்த ஆரம்பித்தேன். என்னால் எளிதாக நீந்த முடிந்ததால் அடுத்த வாரமே தினமும் ஒரே மணி நேரம் நீந்த தொடங்கினேன். எனக்கு அப்போது இருந்து இப்போது வரை பயிற்சியாளராக இருப்பவர் ஜான் கிறிஸ்டோபர். அடுத்த 3 மாதத்தில் பாரா விளையாட்டுக்களைப் பற்றி எடுத்துச்சொல்லி என்னை பயிற்றுவித்தார்.

உங்கள் வெற்றிப் பயணத்தைப் பற்றி சொல்லுங்கள்?

2003-ல் முதன் முதலாக நீச்சல் குளத்துக்குள் இறக்கிவிடப்பட்டேன். தொடக்கத்தில் 1 மணி நேரமாக ஆரம்பித்த இந்த பயிற்சி இப்போது காலை, மாலை என தினமும் 6 மணி நேரம் வரை நீள்கிறது. வெயிலோ, பனியோ, மழையோ, குளிரோ எதையும் பொருட்படுத்தாமல் தினமும்நீச்சல் பயிற்சியில் ஈடுபடுகிறேன். சாதிப்பதற்கு உடல் குறைபாடு ஒரு தடை அல்ல. மனதில் உறுதியாக செயல்பட்டால் எந்த இலக்கையும் அடையலாம் என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன்.

நீந்த ஆரம்பித்த 6 மாத‌த்தில் மாநில அளவில் விளையாடிய நான்,அடுத்த 6 மாதத்தில் தேசிய அளவில் பங்கேற்றேன். 2004-ல் தேசிய அளவிலான போட்டியில் ஜூனியர் லெவலில் வெள்ளிப்பதக்கம் வென்றேன். ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து விளையாடி பதக்கங்களை வென்றேன். 2015-ம் ஆண்டில் ஜூனியர் உலக சாம்பியன் ஆனேன். அந்த போட்டியில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களைவென்றேன். 18 வயதிற்குள் தனிநபர்பிரிவில் சர்வதேச தங்க பதக்கத்தை வென்றேன். ஆசிய போட்டிகளில் 16 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனைகளை முறியடித்திருக்கிறேன். டோக்கியோவில் நடந்த கடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் 11-வது இடத்தை பிடித்தேன். டோக்கியோ போட்டியில் 6 தங்கம், 1 வெண்கல பதக்கங்களை வென்றேன்.

உங்களது உடல் குறைபாடு, அறுவை சிகிச்சை போன்ற சவால்களை எப்படி சமாளித்து, வெல்கிறீர்கள்?

முதுகு தண்டுவட பிரச்சினை, கால் சீரமைப்பு ஆகியவற்றுக்காக என் உடலில் இதுவரை 19 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என் இரு கால்களின் ஒழுங்கமைப்புக்காக ஒரு அறுவை சிகிச்சை மட்டும் 14 மணி நேரம் நடந்திருக்கிறது. காலில் ஏற்படும் காயங்கள் என்னை மாதக்கணக்கில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முடக்கி போட்டுவிடும். விளையாட்டின் மீதான ஆர்வமும், நாட்டின் மீதான பற்றும் என்னை எழுந்து ஓட வைத்துவிடும். எனது கடினமான அணுகுமுறையாலேயே 75 சர்வதேச பதக்கங்களை பெற்றிருக்கிறேன்.

உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா?

நாட்டிலேயே மிக இளம் வயதிலேயே விளையாட்டுக்கான தேசிய விருது எனக்குத்தான் வழங்கப்பட்டது. அதேபோல கர்நாடக அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருது எனக்கு 21 வயதிலேயே கிடைத்தது. ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்ற போதும், காமன்வெல்த் போட்டியில் வென்ற போதும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 16 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ஆசிய சாதனையை முறியடித்தபோது நான் அணிந்திருந்த தொப்பியை பிரதமருக்கு வழங்கினேன். போட்டிகளில் வென்றதும் ஏராளமான வாழ்த்துகள், பரிசுகள், பிரபலங்களின் பாராட்டுகள் கிடைக்கின்றன. பொதுவாக நம்முடைய நாட்டில் வெற்றி பெற்ற பின்னரே அதிகளவில் நிதி வழங்கப்படுகிறது. அந்த நிதியில் பாதி அளவுக்கு பயிற்சியின்போது கொடுத்தால், இன்னும் நன்றாக பயிற்சி மேற்கொண்டு பெரிய‌ வெற்றிகளை பெற முடியும் என நினைக்கிறேன். அதேபோல‌ நாடு முழுவதும் உள்ள விளையாட்டு மைதானங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையிலான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்