வெற்றிப் பயணம் தொடரும் - இகா ஸ்வியாடெக் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றுள்ள போலந்து டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் தனது வெற்றிப்பயணம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இகா ஸ்வியாடெக்கும், செக்.குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவாவும் மோதினர். இதில் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

வெற்றிக்குப் பின்னர் இகா ஸ்வியாடெக் கூறியதாவது: கடந்த ஆண்டு இப்போட்டியில் பட்டம் வென்றபோது மகிழ்ச்சிக் கடலில் நீந்தினேன். தற்போது இந்த ஆண்டும் பட்டத்தை மீண்டும் வசப்படுத்தியதில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த வெற்றிப் பயணம் தொடரும் என்று நம்புகிறேன்.

முதல் செட்டை வென்ற நிலையில், 2-வது செட்டை இழந்தபோது சற்று கடினமாக உணர்ந்தேன். இருந்தபோதும் சுதாரித்து விளையாடி சாம்பியன் பட்டம் வெல்லத் தேவையான 3-வது செட்டைக் கைப்பற்றினேன். ஒரு விளையாட்டு வீராங்கனையாக என்னுடைய விளையாட்டை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறேன். விளையாட்டின்போது அமைதியாக விளையாடி வெற்றியைப் பெறுவதுதான் என்து ஸ்டைல். அதைத்தான் நான் களத்தில் செய்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு இகா ஸ்வியாடெக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE