ஹாக்கி | இந்திய ஆடவர், மக்களின் அணிகள் ஜூனியர் உலகக் கோப்பைக்கு தகுதி

By செய்திப்பிரிவு

ககாமிகஹாரா: ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணியினர் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளனர்.

ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், தென் கொரிய அணியும் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரிய மகளிர் அணியை வீழ்த்தினர்.

இதன்மூலம் முதல்முறையாக இந்திய மகளிர் அணியினர் ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்திய அணிக்காக 22-வது நிமிடத்தில் அன்னுவும், 41-வது நிமிடத்தில் நீலமும் கோல் அடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தனர்.

இந்த தொடரில் இதற்கு முன் இந்திய அணி 4 வெண்கலப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்த நிலையில், தற்போது முதல்முறையாக இந்திய மகளிர் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புநடைபெற்ற ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மகளிர் அணியும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம், 2 ஜூனியர் அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் சிலி நாட்டில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE