ஆசியக் கோப்பை கிரிக்கெட் | பாகிஸ்தானின் யோசனைக்கு ஏசிசி விரைவில் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடல் யோசனைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு பாகிஸ்தானில் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தக்கூடாது என இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்திக் கொள்ளலாம் (ஹைபிரிட் மாடல்) என்று பாகிஸ்தான் யோசனை தெரிவித்தது.

தனது யோசனையை ஏற்றால் மட்டுமே, இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்போம் என்று பாகிஸ்தான் நிபந்தனை விதித்தது. இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டம் நடைபெறவுள்ளது. ஏசிசி அமைப்பின் தலைமைப் பொறுப்பையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலரான ஜெய் ஷாவே வகிக்கிறார். ஜூன் 13-ல் நடைபெறும் கூட்டத்தில், பாகிஸ்தானின் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் ஆசியக் கோப்பையில், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் இலங்கையில் நடத்தப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் 13-ம் தேதி ஏசிசி கூட்டத்துக்குப் பின்னர் வெளியாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE