லண்டன்: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்திருந்தது.
இறுதி நாள் ஆட்டத்தில் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணியின் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்கிய ரஹானே 20 ரன்களுடன் நேற்று களமிறங்கினர்.
இருவரும் நிதானத்துடன் விளையாடியபோதும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்தில் அனல் பறந்தது. 49 ரன்களை எடுத்த நிலையில் அரை சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஆட்டமிழந்தார்.
போலண்ட் வீசிய பந்தை அடித்து ஆட முயன்றபோது ஸ்டீவ் ஸ்மித் பாய்ந்து சென்று கேட்ச் செய்தார். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. இதைத் தொடர்ந்து அதே ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா ரன் கணக்கைத் தொடங்காமலேயே போலண்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் என்ற மோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத்தும், ரஹானேவும் இன்னிங்ஸை கட்டமைக்க முயன்றனர். ஆனால் துரதிருஷ்டவசமாக ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து கே.எஸ்.பரத் 23, ஷர்துல் தாக்குர் 0, உமேஷ் யாதவ் 1, மொகமது சிராஜ் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். மொகமது ஷமி 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 63.3 ஓவர்களில் 234 ரன்களுக்கு இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப்பை வென்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்களையும், ஸ்காட் போலந்த் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். மிட்செல் ஸ்டார்க் 2, பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதமடித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியில் வென்றதையடுத்து ரூ.13 கோடி பரிசுத்தொகையுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதம், ஆஸ்திரேலிய அணியிடம் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.6.5 கோடி பரிசாக அளிக்கப்பட்டது.
தொடரும் சோகம்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா 2-வது முறையாக தகுதி பெற்ற இந்தியா இந்த முறையும் தோல்வி கண்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில்நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி கண்டிருந்தது.
5 ஆயிரம் ரன்கள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிரிக்கெட் விளையாட்டின் 3 வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) 5 ஆயிரம் ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை இந்திய வீரர் விராட் கோலி செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 93 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, மொத்தம் 5,003 ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர்கள் (அனைத்து வடிவங்களிலும்) வரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 110 போட்டிகளில் 6,707 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 2,037 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மோசமான சாதனை: டெஸ்ட் போட்டிகளில் டாஸில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்து அதிகமான தோல்விகளைப் பெற்ற அணியாக இந்தியா உள்ளது. இதுவரை 58 டெஸ்ட்களில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து 9 வெற்றி, 21 தோல்வி, 28 டிராக்களை பெற்றுள்ளது.
அனைத்து பட்டங்களையும் கைப்பற்றிய ஆஸி.: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை (1987, 1999, 2003, 2007, 2015), டி20 உலக கோப்பை (2021), சாம்பியன்ஸ் டிராபி (2006, 2009) மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021-23) ஆகிய பட்டங்களை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
> இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸி. வீரர் ஸ்காட் போலண்ட் 33 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார்.
> இங்கிலாந்தில் மட்டும் 50 அல்லது அதற்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் இடம்பிடித்துள்ளார். இந்த வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்ன் (129 விக்கெட்கள்) முதலிடத்தில் உள்ளார். அதற்கடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட் (67 விக்கெட்கள்), ஹுக் டிரம்பிள் (67 விக்கெட்கள்), மேற்கிந்தியத் தீவுகள் அணியின் லான்ஸ் கிப்ஸ் (62 விக்கெட்கள்), ஆஸ்திரேலியாவின் பில் ஓ ரீலி (50) விக்கெட்கள்) உள்ளனர். 6-வது இடத்தில் லயன் உள்ளார்.
> டிராவிஸ் ஹெட், ஸ்மித் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து எங்களது வெற்றியை சுலபமாக்கிவிட்டனர்.போட்டி முழுக்க நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஸ்காட் போலண்ட், நேதன் லயன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். அணியில் இடம்பெற்ற அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்தனர். - பேட் கம்மின்ஸ், ஆஸி. அணியின் கேப்டன்.
> உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அபாரமாக விளையாடி எங்களது வெற்றியைப் பறித்துவிட்டனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2 முறை விளையாடியதே சாதனைதான். - ரோஹித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago