ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 5-ம் நாளில் 234 ரன்களுக்குச் சுருட்டி 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலக டெஸ்ட் சாம்பியனாக வெற்றி முரசம் கொட்டி இருக்கிறது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்கள் ஆதிக்க வழிக்கு ஆஸ்திரேலிய அணி மீண்டும் திரும்பியுள்ளது என்றே கூற வேண்டும்.
ஆட்டத்தின் கடைசி நாளில் 164/3 என்று இந்திய அணி தொடங்கியபோது பெரிய விரட்டலையோ அல்லது கொஞ்சமாவது ஆஸ்திரேலிய வயிற்றில் பயமெனும் புளியையோ கரைப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களிடத்தில் இந்திய அணி 70 ரன்களுக்கு மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டு கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி விட்டனர்.
நான்காம் நாளில் நன்றாக ஆடிய விராட் கோலி, ஐந்தாம் நாளில் தனது ஸ்கோரில் மேலும் 5 ரன்களைச் சேர்த்து ஸ்காட் போலண்ட் வீசிய பந்தின் மீது மட்டையை அலட்சியமாக ஏவி விட்டு எட்ஜ் ஆகி ஸ்மித்தின் அட்டகாசமான கேட்சுக்கு வெளியேறினார். இதே ஓவரில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஜடேஜாவும் வீழ்ந்தார். ஸ்காட் போலண்டின் அற்புதமான துல்லியத்திற்கு மட்டையை விட்டார். அது, எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் கேரியிடம் கேட்ச் ஆனது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒதுக்கப்பட்டு பிறகு கடினமாக உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடி, சிஎஸ்கே-வுக்காக ஐபிஎல்-இல் சிறப்பாக ஆடி மீண்டும் இந்திய அணியில் தன் இடத்தை முயன்று கண்டடைந்த ரஹானே, ஸ்டார்க் வீசிய 6-வது ஸ்டம்புக்குச் சென்ற பந்தை ஆன் த ரைசில் ஆட முற்பட பவுன்ஸ் கொஞ்சம் கூடுதலாக அமைய எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்திய போராட்ட எதிர்பார்ப்பு அங்கேயே முடக்கப்பட்டது.
» மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி | முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி
» தனது பயோபிக்கில் வேண்டுமென்றே தன் அண்ணனை தவிர்த்தாரா தோனி?
முதல் இன்னிங்ஸ் நாயகன் ஷர்துல் தாக்கூர் இந்த முறை நேதன் லயன் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை சரியாகக் கணிக்காமல் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார். விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே என்று லயன் பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்கிறேன் பார் என்று கொடியேற்றி கேட்ச் ஆனார். இந்த டெஸ்ட் இவருக்கு மறக்கப்பட வேண்டியதாயிற்று, பேட்டிங்கிலும் ஒன்றும் இல்லை, விக்கெட் கீப்பிங்கிலும் ஏகப்பட்ட சொதப்பல்கள்.
உமேஷ் யாதவ், சிராஜ் ஆகியோரை முறையே ஸ்டார்க் மற்றும் லயன் வீழ்த்த ஷமி 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்து நாட் அவுட். இந்தியா 234 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. தொடர்ந்து 2-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரன்னர்களாக முடிந்து போயுள்ளனர். ஆட்ட நாயகனாக ட்ராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அஸ்வினை உட்காரவைத்தது எத்தனை பெரிய தவறு என்பதை உணர்வார்களா? தெரியவில்லை.
இந்திய அணி செய்த தவறுகள் என்னென்ன?: இந்த டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் இருவரும் சதம் கண்டு 285 ரன்கள் கூட்டணி அமைத்ததுதான் வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளியாகும். இந்த இருவரில் யாரையாவது ஒருவரையாவது விரைவில் வீழ்த்தியிருந்தால் ஒருவேளை டெஸ்ட் போக்கு மாறியிருக்கலாம். ரோஹித் சர்மா கேப்டன்சியின் பாலபாடத்தில்தான் இருக்கிறார். அஸ்வினை எடுத்திருந்தால் ஒருவேளை இந்த இருவரில் ஒருவரை வீழ்த்தியிருக்கலாம். அதனால் ஆட்டம் மாறியிருக்கலாம் என்பதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப் பிறகு பவுலிங் சொத்தையாக அமைந்ததுதான் இந்த படுதோல்விக்குப் பிரதான காரணம். இரண்டாவது, இங்கிலாந்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை முதன்முதலாக ஆஸ்திரேலிய பந்து வீச்சை எதிர்கொள்கின்றது. இதனால், டியூக் பந்தில் ஆஸ்திரேலியா பவுலர்கள் எப்படி வீசுவார்கள் என்பதிலும் அதன் ஸ்விங் தன்மை பற்றியும் சரியான முன்னறிவு இல்லை.
மேலும், முதல் இன்னிங்ஸில் ஸ்விங்கை சரியாகக் கணிக்க முடியாமல் திணறி ஷுப்மன் கில், புஜாரா இருவரும் பவுல்டு ஆனது படு கேவலம். ஒன்று ஸ்விங்கின் அளவு தெரிய வேண்டும் அல்லது தங்களது ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்பதையாவது நினைவில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் கண்போன போக்கும் சரியில்லை, கண்போன போக்கில் இந்திய பேட்டர்களின் கால் போனபோக்கும் சரியில்லை, பேட் போன போக்கும் சரியில்லை, இவர்கள் மனம் போன போக்கும் சரியில்லை என்றே கூற வேண்டும்.
பயிற்சியாளர் திராவிட்டின் அணுகுமுறையில் கோளாறு உள்ளது. புஜாரா 2-வது இன்னிங்சில் ஏன் அந்த ஷாட்டை ஆட வேண்டும். முன்பின் ஆடாத ஷாட்டையெல்லாம் அவர் ஆடவேண்டிய நெருக்கடி அவருக்கு ஏன் கொடுக்கப்பட்டது? விராட் கோலி நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என்ற விவாதம் இப்போது எழக்கூடும். இவர் அடிக்கும் 14 ரன்களையும் எப்போதாவது அரிதாக அடிக்கும் டெஸ்ட் 40 ரன்களையும் வேறு வீரரும் அடிக்க முடியும். உதாரணமாக சர்பராஸ் கான், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் அடிக்க முடியும். இதோடு இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதுதான் எதிர்கால இந்திய அணியை கட்டமைக்க உதவும் என்ற வாதமும் இங்கே எழுகிறது.
சூப்பர் ஸ்டார்களின் காலம் முடிவுக்கு வர வேண்டும். இதை அவர்களே செய்ய வேண்டும். அப்படிச்செய்யவில்லை என்றால் அவர்களை அழைத்துச் சொல்லி விடுவதுதான் ஒரு நேர்மையான அணித் தேர்வுக் குழு செய்யும் காரியமாக இருக்கும். ரோஹித் சர்மாவிடமிருந்து டெஸ்ட் கேப்டன்சியைப் பிடுங்கி ஒன்று அஸ்வினிடமோ அல்லது ரஹானேவிடமோ கொடுக்கும் நேரம் வந்து விட்டது. ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், பும்ரா டெஸ்ட் அணிக்குத் திரும்புவது மிகுந்த அவசியமாகின்றது. ஐபிஎல் பண மோகம், ஜாலி கிரிக்கெட் மோகம் இந்திய அணியைப் பீடித்துள்ளது. அதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சீரியசாக ஆடும் மன நிலையை இழந்துவிட்டனர். புதிய அணியை கொண்டு வந்தால்தான் இதுபோன்ற இழிவான தோல்விகளைத் தவிர்க்க முடியும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago