மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி | முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி

By செய்திப்பிரிவு

ககாமிகஹாரா: மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணியை இந்திய அணி வீழ்த்தியது.

ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து இந்தியா இறுதி போட்டியில் நுழைந்தது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரிய அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றது. இந்திய அணிக்காக 22வது நிமிடத்தில் அன்னுவும், 41வது நிமிடத்தில் நீலமும் கோல் அடித்து இந்த வெற்றியை சாத்தியமாக்கினர்.

இந்த தொடரில் இதற்கு முன் இந்திய அணி 4 வெண்கலப் பதக்கங்களையும், 1 வெள்ளிப் பதக்கததையும் வென்றுள்ளது. மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்த நிலையில், தற்போது முதல்முறையாக இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தொடர்ச்சியாக தென் கொரிய அணிக்கு நான்கு நிமிட இடைவெளியில் ஐந்து முறை பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஐந்து முறையும் சேவ் செய்து இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மகளிர் அணியும் சாம்பியன்ஷிப் வென்றதன் மூலம், இரண்டு ஜூனியர் அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சிலி நாட்டில் உள்ள சான்டிகோ நகரில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE