சந்தேகத்தின் பலனை பேட்டருக்குச் சாதகமாக்கும் மரபு எங்கே போனது?- சுப்மன் கில் அவுட் சர்ச்சை குறித்து சில கேள்விகள்!

By ஆர்.முத்துக்குமார்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் சர்ச்சையுடன் முடிய, 5-ம் நாள் ஆட்டம் உச்சக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் 444 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் 164/3 என்ற நிலையில் உள்ளது. விரட்ட நினைத்தால் விரட்டலாம். என்ன ரிஷப் பண்ட் இல்லை. ஒரு பெரிய கூட்டணி, டெய்ல் எண்டர்களிடமிருந்து சீரியசான பங்களிப்பு இருந்தால் அன்று கவாஸ்கர் & கோ சாதிக்க முடியாததை இன்று ரோஹித் அண்ட் கோ நிச்சயம் சாதிக்கவே முடியும்.

இன்று 280 ரன்கள் தேவை. 90 ஓவர்கள் உள்ளன. இந்தப் பிட்சில் விரட்டுவது மிக மிகக் கடினமே, அதே போல் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை அத்தனை எளிதாக எடுத்து விடவும் முடியாது, நாமே கையில் தூக்கிக் கொடுக்காமல் இருந்தால், வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளுக்கு அதிக மதிப்பு கொடுத்து ஆடினால் ஆஸ்திரேலியாவின் வயிற்றில் புளியைக் கரைக்கும் இறுதி நாளாக இது மறக்க முடியாத ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தினமாக அமையும். நிற்க.

நேற்று ஷுப்மன் கில் 18 ரன்களில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த போது ஸ்காட் போலண்ட் பந்தை எட்ஜ் செய்ய கல்லியில் இடது புறம் டைவ் அடித்து கேமரூன் கிரீன் கேட்ச் எடுத்தார், எடுத்த எடுப்பிலேயே கொண்டாடி கேட்சை தரை தட்டாமல் எடுத்து விட்டதாக ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியுமே கொண்டாட்டம் போட்டது, ஆனால் அது துல்லியமாக எடுக்கப்பட்ட கேட்சா என்பது கேமரூன் கிரீனுக்கே வெளிச்சம், அவர் அருகில் இருந்த பீல்டருக்கே வெளிச்சம்.

ஒரு பீல்டர், தான் ஒழுங்காக கேட்சை எடுத்தோமா, அல்லது தரையில் பட்டு எடுத்தோமா என்பதை அறியாமல் இருக்கவே முடியாது. இதுதான் உண்மை. ஆஸ்திரேலியாவின் முன்னாள், இந்நாள் வீரர்கள் இத்தகைய புரட்டுக் கேட்ச்களை எடுத்தது போலவே நாடகமாடியிருப்பதை நாம் பலமுறை பார்த்தும் இருக்கிறோம். ஆகவே இந்த கேட்ச் மீது கில் மற்றும் இந்திய ரசிகர்கள் அதிருப்தியும் கோபமும் அடைவதற்கான அத்தனை நியாயங்களும் உள்ளன.

முன்பெல்லாம் கிரிக்கெட்டில் ஒரு மரபு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது முடிவெடுப்பதில் தீரா சந்தேகம் எழுந்தால் சந்தேகத்தின் பலனை பேட்டருக்கு சாதகமாக்கும் போக்கு நடுவர்களிடத்தில் இருந்தது. அது மிக நல்லதொரு மரபாக இருந்து வந்தது. ஏனெனில் ஒரு பவுலருக்கு அடுத்த பந்து, அடுத்த ஒவர் என்று அந்த பேட்டரை வீழ்த்த வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் பேட்டருக்கு தவறாக அவுட் கொடுத்து விட்டால் அதை திரும்பப் பெற முடியாது, அது அந்த பேட்டரின் அந்த இன்னிங்ஸின் மரணம்தான். ஆனால் இப்போதெல்லாம் இந்த ‘சந்தேகத்தின் பலனை பேட்டருக்கு’ அளிக்கும் மரபு காணாமல் போனதேனோ தெரியவில்லை. தொழில்நுட்பத்தின் மீது அத்தனை நம்பிக்கையா? அல்லது தொழில்நுட்பம் என்ன அத்தனைத் துல்லியமா? தொழில்நுட்ப உதவி இருந்தாலும் துல்லியம் கிடைக்காது என்பதுதான் நாம் இதுவரை பார்த்த சர்ச்சைக்குரிய தீர்ப்புகளில் இருந்து வந்துள்ளது. டிவி நடுவரை ஆலோசிக்கும் முன் இம்மாதிரி நிலைகளில் களநடுவர் சாஃப்ட் சிக்னல் செய்வார். ஆனால் அந்த நடைமுறையும் இப்போது விலக்கப் பட்டு விட்டது.

ஷுப்மன் கில் அவுட் ஏற்படுத்திய அதிர்ச்சியினால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. இது தேவையில்லாதது அல்லவா? அதனால்தான் சந்தேகத்தின் பலனை பேட்டருக்கு அளிக்கும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்கிறோம். ஒரு ஆங்கிளில் கிரீன் கேட்சை தரை தட்டாமல் எடுத்தது போல் தெரிந்தாலும் இன்னும் சில ஆங்கிள்களில் பந்து தரையில் பட்டது போல்தான் தெரிந்தது. எனவே இருவேறு காட்சிகள், ஒன்றுக்கொன்று எதிரெதிரான காட்சிகளில் எந்த வித அடிப்படையும் இன்றி ஒரு காட்சியை மட்டும் உண்மை என்று எடுத்துக் கொள்வது என்ன நியாயம்? என்ன தர்க்கம்? ஆகவேதான் சந்தேகத்தின் பலனை பேட்டருக்கு அளிக்கட்டும் என்கிறோம்.

ஆனால் ஒரு விஷயம் என்னவெனில் சம்பந்தப்பட்ட வீரரான ஷுப்மன் கில் போட்டி முடிவதற்கு முன்பே ரசிகர்களைத் தூண்டிவிடும் விதமாக தன் அவுட் குறித்த சந்தேகத்தை அவரே வெளியிட்டிருக்க வேண்டிய தேவையில்லை. இதனால் ஷுப்மன் கில் நடத்தை விதிமீறல் என்னும் குற்றச்சாட்டையும் சுமக்க வேண்டியிருக்கும்.

இன்று கோலி, ரஹானே கையில் ஆட்டம் உள்ளது. ஷுப்மன் கில்லின் இந்த தீர்ப்பை முன் வைத்தாவது ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் இல்லையேல் குறைந்தது ட்ரா செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை சுலபமாகத் தாரை வார்ப்பது ரசிகர்களின் கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்