பிரெஞ்சு ஓபன்: மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

By செய்திப்பிரிவு

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலின் முச்சோவாவை வீழ்த்தி உலகின் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இன்று போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் குடியரசு வீராங்கனை கரோலின் முச்சோவா மோதினர்.

இதில் ஸ்வியாடெக் 6-2 என்ற செட் கணக்கில் முதல் செட்டையும், முச்சோவா 7-5 என்ற செட் கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 6-4 என்ற கணக்கில் முச்சோவாவை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

22 வயதான ஸ்வியாடெக், கடந்த ஆண்டும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வெற்றியின்மூலம் மோனிகா செலஸ் (1990, 1991, 2002)க்குப் பிறகு பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து பட்டங்களை வென்ற இளம் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஸ்வியாடெக்.

மேலும், நான்கு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள் வரிசையில் செலஸ் மற்றும் நவோமி ஒசாகாவுடன் இணைந்துள்ளார் ஸ்வியாடெக்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE