பும்ரா ரிட்டர்ன்ஸ் எப்போது? - தினேஷ் கார்த்திக் தகவல்

By செய்திப்பிரிவு

லண்டன்: ஜஸ்பிரீத் பும்ராவின் வருகை எப்போது என்பதை இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, முதுகுவலி காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை. பிசிசிஐ மருத்துவக்குழுவின் அறிவுரையின் படி காயத்துக்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நியூஸிலாந்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் பும்ரா. அவரது உடல் நிலை குறித்து, "பும்ராவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்து 6 வாரங்களுக்கு பிறகு பயிற்சி மற்றும் சிகிச்சை மூலம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் நடவடிக்கைகளை அவர், மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்" என்று தகவல் வெளியிட்டது பிசிசிஐ.

அதன்படி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா பயிற்சி மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டுவருகிறார். எனினும், ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கிய தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை.

பும்ராவின் வருகை எப்போது என்பதை இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் கமெண்ட்ரியின்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நோக்கில் பும்ரா பயிற்சி செய்து வருகிறார் என்று தினேஷ் கார்த்திக் தகவல் சொன்னார்.

ஆகஸ்ட் மாதம், இந்தியா அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக, ஷார்ட் பார்மெட் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தும்பொருட்டு அயர்லாந்து தொடரில் பும்ரா பங்கேற்கிறார் என்று சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE