WTC Final நாள் 4 | கோலி, ரோகித்தின் 40+ ரன் வேட்டை - இந்தியா 164/3

By செய்திப்பிரிவு

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 280 ரன்கள் வேண்டும்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 173 ரன்கள் பின்தங்கியதுடன் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலையில் இருந்தத்து. இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் லபுசேன்னை 41 ரன்களில் அவுட்டாக்கினார் உமேஷ் யாதவ். அந்த விக்கெட் இந்திய அணி ரசிகர்களுக்கு இது பெரும் ஆசுவாசம் கொடுத்தது. அடுத்து ஜடேஜாவின் ஓவரில் கேமரூன் கிரீன் போல்டானது ஆஸி., பேட்ஸ்மேன்களின் வேகத்தை தணித்தது. அலெக்ஸ் கேரி - மிட்செல் ஸ்டார்க் இணைந்து விக்கெட்டாகாமல் கவனமாக ஆடி, இந்திய பவுலர்களுக்கு போக்கு காட்டினர்.

குறிப்பாக, அலேக்ஸ் கேரி அரைசதம் விளாசி பொறுப்பாக ஆடினார். உணவு இடைவேளைக்கு பிறகும் கூட இந்த பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. முஹம்மது சமி மிட்செல் ஸ்டார்க்கை 41 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து பேட் கம்மின்ஸ் விக்கெட்டானதும் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 270 ரன்களில் டிக்ளேர் கொடுத்து இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், முஹம்மது சமி, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

444 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் 18 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா - புஜாரா இணை நிதானம் காட்டியது. ரோகித் பவுண்டரிகளை விளாசி நம்பிக்கை கொடுக்க, புஜாரா பக்கபலமாக இருந்தார். ரோகித் அரைசதம் எட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 43 ரன்களில் நாதன் லயன் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரிலேயே புஜாராவும் 27 ரன்களில் நடையைக்கட்டினார்.

அடுத்தடுத்த இரண்டு விக்கெட் வீழ்ச்சிக்கு மத்தியில் களம்கண்ட விராட் கோலி மற்றும் ரஹானே சரிவில் இருந்து மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டனர். ஆஸியின் பவுலிங்கை சிறப்பாக கையாண்ட இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது.

4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 280 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் விராட் கோலி 44 ரன்கள், ரஹானே 20 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். நாளை ஐந்தாம் நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE