எ
திர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து திருவிழா டெல்லியில் இன்று தொடங்குகிறது. கால்பந்து உலகில் கடைகோடியில் இருந்து மையப்பகுதிக்கு இந்தியா நகரும் தருணம் இது. ‘தூங்கும் ராட்சதர்கள்’ என வர்ணிக்கப்படும் இந்தியாவில் பிபா தொடரால் கால்பந்து புரட்சி ஏற்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
தொடக்க நாளான இன்று டெல்லி மற்றும் மும்பையில் தலா இரு ஆட்டங்கள் என மொத்தம் 4 போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளன. இதில் போட்டியை நடத்தும் இந்தியா மோதும் ஆட்டமும் ஒன்றாகும். இந்தியாவை பொறுத்தவரையில் இந்த தொடரானது போட்டியின் முடிவுக்கு அப்பாற்பட்டதாக கருதப்படக்கூடும்.
உலக அரங்கில் இந்தியா கால்பந்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததாலோ என்னவோ பிபா அமைப்பு நம்மை தூங்கும் ராட்சதர்கள் என வர்ணித்தது. ஆனால் தற்போது இதை சற்று திருத்தி ‘உணர்ச்சிமிக்க ராட்சதர்கள்’ என இந்திய அணியை அழைக்கிறது பிபா. முதன் முறையாக பிபா உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, தொடரை நடத்தும் நாடு என்ற முறையில் அறிமுக அணியாக களமிறங்குகிறது. சொந்த மண் சாதகத்துடன் நமது வீரர்கள் சர்வதேச தரத்திலான உணர்ச்சி மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கின்றனர்.
பிரேசில் அணியில் நட்சத்திர வீரரான ஜூனியர் வினிசியஸ் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட வில்லை. அடுத்த ஆண்டு அவர், ரியல் மாட்ரிட் கிளப்பில் இணைய உள்ளதால் தற்போது விளையாடி வரும் கிளப், வினிசியஸை விடுவிடுக்க மறுத்துவிட்டது. எனினும் லிங்கன் கோர்யா, பாலின்ஹோ போன்ற திறமையான வீரர்கள் இருப்பதால் 4-வது முறையாக பட்டம் வெல்லும் கனவுடன் களமிறங்குகிறது பிரேசில். இதில் லிங்கன் கடந்த 8 ஆட்டங்களில் 5 கோல்கள் அடித்துள்ளார்.
இங்கிலாந்து விங்கர் ஜடோன் சான்சோ, அமெரிக்க ஸ்டிரைக்கர் ஜோஸ் சர்ஜென்ட், ஸ்பெயினின் அபெல் ரூயிஸ், பெர்ரான் டாரெஸ், ஜெர்மனி கேப்டன் ஜான் பைட் ஆர்ப் ஆகியோர் கிளப் அளவிலான போட்டிகளில் அபார திறனை வெளிப்படுத்தி உள்ள நிலையில் உலகக் கோப்பையில் களமிறங்குகின்றனர்.
இவர்களில் ரூயிஸ் யூரோ யு 17 தொடரில் 16 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த நட்சத்திரங்களுடன் முதன்முறையாக பிபா கால்பந்து தொடரில் இந்திய அணியைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீரர்களான 21 பேரும் தங்கள் எதிர்கால வாழ்க்கையை நோக்கிய பயணத்தை தொடங்குகின்றனர்.
24 அணிகளைச் சேர்ந்த 504 வீரர்களும் தங்களது எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் முதல் படிக்கட்டில் காலடி எடுத்து வைக்க உள்ளனர். இந்த தொடரின் வாயிலாகவே நெய்மர், ரொனால்டினோ, லூயிஸ் பிகோ, சேவி, இகர் கேசிலாஸ், பபுன், அன்ட்ரியாஸ் இனியஸ்டா போன்றோர் நட்சத்திர வீரர்களான உருவெடுத்தனர். அந்த வழியில் இவர்களும் பயணிக்க இந்த உலகக் கோப்பை பாலமாக இருக்கும்.
1985-ம் ஆண்டு முதல் யு 17 உலகக் கோப்பை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரை நடத்தும் 5-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன்னர் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்த தொடரை நடத்தி உள்ளன. 1950-ம் ஆண்டு நடைபெற்ற பிபா உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியாவுக்கு 67 வருடங்களுக்கு பிறகு பிபா தொடரை நடத்தும் வாய்ப்பும், அதன் வழியாக விளையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. பாய்சுங் பூட்டியா, ஐ.எம்.விஜயன், சுனில் சேத்ரி உள்ளிட்ட இந்திய நட்சத்திர வீரர்கள் கண்ட கனவு தற்போது கேப்டன் அமர்ஜித் சிங் கியாம், கோமல் தாடல், அனிகெட் ஜாதவ் ஆகியோர் வழியாக நிறைவேற உள்ளது.
உள்கட்டமைப்பு, அடிமட்ட நிலை, இளம் வீரர்கள் மேம்பாடு, தரமான பயிற்சி ஆகியவற்றால் தற்போது இந்திய கால்பந்து சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. 1950 மற்றும் 1960-ம் ஆண்டுகளில் ஆசிய அளவில் இந்தியா வலுவாக இருந்தது. அந்த நிலையை அடைய இந்த யு 17 உலகக் கோப்பை சிறந்த அடித்தளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தத் தொடரை வெற்றிகரமாக நடத்தும் பட்சத்தில் 2019-ம் ஆண்டு யு 20 பிபா உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையைபெறவும் வாய்ப்பு உள்ளது.
6 நகரங்களில் நடைபெறும் 52 ஆட்டங்களை உலகம் முழுவதும் உள்ள 200 மில்லியன் ரசிகர்கள் கண்டுகளிக்கக்கூடும். பிபா நடத்தும் 17-வது, யு 17 உலகக் கோப்பை தொடரான இதில் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இந்தியா இடம் பிடித்துள்ள ஏ பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா அணிகளுடன் இரு முறை சாம்பியனான கானாவும் உள்ளது. இந்திய அணி லீக் சுற்றை கடக்கும் என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும் நம் வீரர்களிடம் இருந்து போராடும் குணம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இரு இடங்களை பிடிக்கும் 12 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இதில் ஒரு அணியாக இந்தியாவும் இருப்பது நமது வீரர்கள் களத்தில் பேராடும் அந்த 90 நிமிடங்களில்தான் இருக்கிறது. பிரேசில், ஸ்பெயின், மெக்சிகோ, கானா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளே இம்முறை பட்டம் வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க சாம்பியனான மாலியும், தொழில்நுட்ப ரீதியாக விளையாடக்கூடிய கொலம்பியாவும் சவால் அளிக்கக்கூடிய அணிகளாக இருக்கின்றன. தூங்கும் ராட்சதர்கள் என வர்ணிக்கப்பட்ட இந்திய அணி செயலாக்கம் கொண்ட போராளிகளாக களத்தில் செயல்பட்டால் மட்டுமே அசகாய சூரர்களாக உருவெடுக்க முடியும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago