WTC Final | தோனியிடம் கீப்பிங் ஆலோசனைகளை நிறைய பெற்றேன்: கே.எஸ்.பரத்

By செய்திப்பிரிவு

லண்டன்: ஆஸ்திரேலிய அணியை இந்தியா கிரிக்கெட் அணி நாளை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பர் சாய்ஸாக இருக்கும் கே.எஸ்.பரத், அனுபவ வீரரும், சீனியருமான தோனியிடம் இருந்து விக்கெட்கீப்பிங் சார்ந்த ஆலோசனைகள் அதிகம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனின் போது தோனியுடன் பேசி இருந்தேன். இங்கிலாந்தில் அவரது விக்கெட் கீப்பிங் அனுபவத்தை அப்போது என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில் பொதுவாக விக்கெட் கீப்பர்களுக்கு தகுந்த சில விஷயங்கள் குறித்தும் பேசினார். அது நல்லதொரு உரையாடலாக அமைந்தது. அதிலிருந்து நான் நிறைய உள்ளார்ந்த படிப்பினை பெற்றேன்.

கீப்பராக செயல்பட முனைப்பு வேண்டும் என நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் வீசப்படும் 90 ஓவர்களையும், ஒவ்வொரு பந்தாக விக்கெட் கீப்பர் கவனிக்க வேண்டும். இது ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம்” என பரத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் பரத். அந்த நான்கு போட்டிகளும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகள். இப்போதைக்கு ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் மற்றொரு விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் உள்ளார். இருந்தாலும் பரத்துக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE