அபத்தப் பெருமித வர்ணனையும் தோனி ஆட்டமிழப்பும்

By ஆர்.முத்துக்குமார்

குவஹாத்தியில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் வார்னரால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் பேட்டிங் சரிவு கண்டது.

தோனியும், கேதர் ஜாதவ்வும் அணியை தூக்கி நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். அப்போது ஆட்டத்தின் 10-வது ஓவரை ஆடம் ஸாம்ப்பா வீசினார். முதல் பந்தை ஜாதவ் சிங்கிள் எடுக்க தோனி ஸ்ட்ரைக்குக்கு வந்தார்.

ஸாம்பா வீச மேலேறி வந்தார் தோனி, பந்தின் லெந்தை சற்றே குறைத்தார் ஸாம்ப்பா, மிட் ஆஃபில் தட்டி விட்டார் தோனி ரன் இல்லை.

அடுத்த பந்து புல்டாஸ், அதனை முறையாக தோனி மிட்விக்கெட் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த பந்து ஸாம்பா வீச மீண்டும் மேலேறி வந்தார் தோனி, ஆனால் பந்து மேலிருந்து சரியாகக் கீழிறங்க தோனி தன்னைத்தானே யார்க் செய்து கொண்டார் ரன் இல்லை.

அடுத்த பந்திற்கும் பந்து வீசுவதற்கு முன்பாகவே மேலேறி வந்தார் தோனி, அதனைப் பார்த்து விட்ட ஸாம்ப்பா பந்தை வைடாக வீசினார். அது வைடு 1 ரன், ஆனால் ஸ்டம்பிங் ஆகியிருக்க வேண்டிய தோனி மீண்டும் கிரீஸிற்குள் தன் பின்னங்காலை வைத்தார். அவுட் ஆவதிலிருந்து தப்பித்தார், உண்மையில் தோனி எதற்காக மேலேறி வந்தாரோ அந்த நோக்கத்தில் அவர் ஏமாந்தார், பந்து வைடாக வேண்டுமென்றேதான் வீசப்பட்டது. இது போன்று ஸாம்ப்பா தோனிக்கு நிறைய முறை, ஆஸ்திரேலியாவில் ஆடிய போதிலிருந்தே செய்து வருகிறார் என்பது கிரிக்கெட்டை நெருக்கமாக பார்ப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு விஷயம்.

ஆனால் தோனியின் புகழ்பாடுவதற்கு நேரம் காலம் இல்லையே, தோனி பீட்டன் ஆனதையே வர்ணனையிலிருந்த சஞ்சய் மஞ்சுரேக்கர், ‘தோனி மேலேறி வந்தது ஒரு பாவ்லாதான், ஸாம்ப்பாவை வைடாக வீச வைக்க வேண்டி அவ்வாறு செய்தார், சரியான உத்தி, சபாஷ் என்ற தொனியில் அபத்தமாக புகழாரம் சூட்டினார். அதாவது அடுத்த பந்து என்னாகும் என்ற ஒரு சிறிய எதிர்பார்ப்பு கூட இல்லாத இந்த முன்னாள் சர்வதேச வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், தோனி பீட்டன் ஆனதை ஏதோ அவர் ஸாம்ப்பாவை ஏமாற்றி வைடு வீசச் செய்ததாக வர்ணனையில் அபத்தப் புகழாரம் சூட்டியது முரண் நகைச்சுவையாக அமைந்தது.

காரணம் அடுத்த பந்தே தோனி மீண்டும் மேலேறி வந்தார், ஆனால் பந்தை முன்னதாகவே பிட்ச் செய்து நன்றாக ஸாம்ப்பா திருப்ப தோனி மீண்டும் மிக நன்றாக பீட்டன் ஆகி, ஸ்டம்ப்டு ஆகி 16 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஓவர் முழுக்க ஒரு பவுலரை வைடு வீச வைக்கத்தான் தோனி மேலேறி வந்து மேலேறி வந்து ஆடினாரா? அபத்த வர்ணனை அப்படித்தான் அதைப் புரிந்து கொண்டது போலும். ஏனெனில் அங்கு வர்ணனை கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கை வர்ணிப்பதை விடுத்து புகழ்பெற்ற வீரர்களை அபத்தமாக புகழ்பாடுவதாக மாறியதுதான் இந்த நகை முரண் நிகழ்வுக்குக் காரணம்.

உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு விரக்தியில் ராஜினாமா செய்த கிரிக்கெட் வரலாற்றறிஞர் ராமசந்திர குஹா தான் வெளியேறிய போது பல விஷயங்களை விமர்சனப்படுத்தியிருந்தார், அதில் இந்திய அணியில் நிலவும் சூப்பர்ஸ்டார் கலாச்சாரம் பற்றியும், வர்ணனையாளர்கள் முதல் அணியின் பயிற்சியாளர் தேர்வு வரை கேப்டன் உள்ளிட்ட அணியின் சூப்பர்ஸ்டார்களே முடிவு செய்வதாக விமர்சித்திருந்தது நினைவிருக்கலாம். அவர் எதை விமர்சித்தாரோ அதுதான் தற்போது சஞ்சய் மஞ்சுரேக்கர் போன்றோரின் வர்ணனையிலும் பிரதிபலித்தது. இயன் சாப்பல், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், ஏன் சவுரவ் கங்குலியே கூட வர்ணனையிலிருந்தால் இத்தகைய அபத்த வர்ணனை நிகழ்ந்திருகாது.

நல்ல வர்ணணையாளர்கள்தான் கிரிக்கெட் ஆட்டத்தின் விறுவிறுப்புக்கு முக்கியமானவர்கள், ஆட்டம் மந்தமடைந்தாலும் வர்ணனையில் நம் சுவாரசியத்தைத் தக்க வைக்கும் கிரேட் வர்ணனையாளர்களின் பாரம்பரியத்தைக் கொண்டது கிரிக்கெட் ஆட்டம், ஆனால் அதற்கும் இந்த சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் விரைவில் சாவுமணி அடித்து விடும் போலிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்