Bazball | “அதிரடி கண்டு அஞ்சவில்லை; இங்கிலாந்து பேட்டர்களின் பலவீனங்கள் மாறவில்லை” - ஆஸி. பயிற்சியாளர்

By ஆர்.முத்துக்குமார்

சமீப காலமாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கூட்டணியில் இங்கிலாந்து அணி புத்தெழுச்சி கண்டுள்ளதற்குக் காரணம் ‘டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தால் என்ன... எவனா இருந்தால் என்ன..’ என்ற அதிரடி தைரிய பேட்டிங் அணுகுமுறையே. ஆனால், யார் இங்கிலாந்தைப் பார்த்து பயந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ஆஷஸ் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக் டொனால்டு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் முடிந்த அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட இங்கிலாந்து 524 ரன்களை ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் என்ற விகிதத்தில் எடுத்தது. இவையெல்லாம் ஆஸ்திரேலியா கண்ணுக்கு முன்னால் வந்து போகும்தானே, அதனால்தான் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ‘பாஸ்பால்’ அணுகுமுறைப் பற்றி பயமில்லை என்கிறார். அயர்லாந்தின் பவுலிங் டீசன்டாக இருந்ததே தவிர அச்சுறுத்தலாக இல்லை. எனவே, ஆஸ்திரேலிய பந்து வீச்சை இப்படியெல்லாம் அடிக்க முடியாது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கெக்கலி கொட்டி வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மெக் டொனால்டு கூறும்போது, “அவர்கள் இப்படி ஆடுவது அவர்கள் விக்கெட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்புகளையே வழங்குகின்றது. யார்க்கர்களைக் கூட வீச முடியும். ஆனால் ஒரு போதும் அவர்கள் பேட்டர்களை ரன் எடுக்க விடாமல் செய்து ரன்னை வறளச் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தும் அணுகுமுறையைக் கையாள மாட்டோம். எதிரியின் கோட்டையில் அவர்கள் உத்திகளை அவர்கள் பாணியிலேயே சந்திப்போம்.

டியூக்ஸ் பந்துகள் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். கள வியூகத்தை கொஞ்சம் வித்தியாசமாக அமைத்து வீழ்த்த முற்படுவோம். இங்கிலாந்து வீரர்கள் அவுட் ஆகும் விதங்களில் முன்னைக்கும், இப்போதைக்கும் பெரிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லை. ஆகவே அவர்களது பலவீனங்கள் அப்படியேதான் இருக்கின்றன. எனவே அதை மேலும் அம்பலப்படுத்துவோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கின்றது. ஆனால், இதிலிருந்து உடனடியாக இங்கிலாந்து அணி மீதும், ஆஷஸ் தொடர் மீதும் கவனத்தைத் திருப்ப வேண்டும். எங்களது அட்டாக்கிங் மனநிலையில் எந்த வித மாற்றமும் இல்லை. நிச்சயமாக இங்கிலாந்து ஆடும் விதம் அவர்களது ஸ்கோரிங் ரேட்டை அதிகமாகவே வைத்திருக்கும். ஆனால், அதேபோல் விக்கெட்டுகள் விழும் இடைவெளியையும் நாங்கள் குறுக்குவோம்” என்கிறார் மெக் டொனால்டு.

இங்கிலாந்து இப்படி ஆடுவதற்குக் காரணம் மெக்கல்லம் முதலில் செய்தது என்னவெனில், இங்கிலாந்து கேப்டன், வீரர்களிடமிருந்து தோல்வி பயத்தை நீக்கிவிட்டார். கிரிக்கெட்டை பொழுதுபோக்காக ஆடுங்கள், ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள் என்கிறார். இது இங்கிலாந்து வீரர்களின் கட்டப்பட்ட கைகளை அவிழ்த்துவிட்டன. அதன் பலனைத்தான் இங்கிலாந்து அணி வெற்றிகள் மூலம் அனுபவித்து வருகின்றது. எப்படியிருப்பினும் ஆஸ்திரேலியாவில் பட்ட அவமானங்களுக்கு இந்த ஆஷஸ் தொடரில் நிச்சயம் பழிதீர்ப்பு இருக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE