விராட் கோலி என்ன செய்ய வேண்டும்? - இயன் சாப்பல் ஆலோசனை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட விராட் கோலி தொடர்ந்து ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வருகிறார். அவரது பேட்டிங் பிரச்சினைகள் பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், இந்நாள் வர்ணனையாளர் இயன் சாப்பல் அலசியுள்ளார்.

இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கோலியின் பேட்டிங் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “கோலி போன்ற பேட்ஸ்மென்கள் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை அதிகம் ஆடாமல் விட்டுவிடுபவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் ரன்கள் ஸ்கோர் செய்வதை முனைப்பாகக் கொள்வதால் ஷாட் தேர்வில் தவறுகள் நிகழ்ந்து விடுகிறது.

மேலும் ரன்கள் எடுத்தாகவேண்டும் என்ற நெருக்கடியும் அவருக்கு உள்ளது. இதனால் பந்தை ஆடுவதில்தான் அவர் அதிகம் நாட்டம் செலுத்துகிறார்,

ஒரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டியதென்னவெனில், பந்துகள் பவுன்ஸ் அதிகமாகும் பிட்ச்களில் அவர் பின்னங்காலில் சென்று இடுப்புக்கு மேல் உயர்ந்து வரும் பந்தை ஆடும்போது டிரைவ் ஆட முயல்வது கூடாது. காரணம் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு கல்லி, அல்லது 3வது ஸ்லிப்பில் கேட்ச் ஆகும். அல்லது உடலுக்கு அருகில் நெருக்கமாக அத்தகைய பந்துகள் வரும்போது கோலி ஆடும் டிரைவ் ஷாட்கள் மட்டையின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப்பில் கேட்ச் ஆகிறது.

இந்தியப் பிட்ச்களில் பந்துகள் இடுப்பளவு உயரம் வரும்போது பின்னங்காலில் சென்று டிரைவ் ஆடுவது பலனளிக்கலாம். ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பவுன்ஸ் பிட்ச்களில் அவர் ஸ்கொயர் கட், புல் போன்ற மட்டையை படுக்கைவசமாக வைத்து ஆடும் ஷாட்களையே அதிகம் பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு ஆடினால் எட்ஜிலிருந்து தப்பலாம். மேலும் அவர் மார்பை பந்து வரும் திசைக்கு நேராக வைத்து ஆடுவது சிறந்தது. கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன் போன்ற பேட்ஸ்மென்கள் பவுன்ஸ் மற்றும் வேகத்தை எதிர்கொள்ள இதுவே சிறந்த வழி என்கின்றனர். அதாவது இருகண்களாலும் பந்தைப் பார்ப்பது சிறந்தது.

சைட் ஆன் நிலையில் ஒரு கண்ணால் மட்டுமே பந்தை பார்க்க முடிகிறது. மேலும் பவுன்ஸ் பந்துகளை கட், புல் ஆட முடியாமல் டிரைவ் ஆட மட்டுமே முடிகிறது இதனால் விக்கெட்டை இழக்க நேரிடுகிறது” இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.

இந்தத் தொடரில் விராட் கோலி 5 இன்னிங்ஸ்களில் 73 ரன்களையே எடுத்துள்ளார். சராசரி 15 ரன்களுக்கும் கீழ் உள்ளது. புவனேஷ் குமார் இவரை விட அதிக ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE