வைகாசி விசாகத்தையொட்டி கும்பகோணத்தில் 4 கோயில்களில் தேரோட்டம்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: கும்பகோணத்திலுள்ள 4 சிவன் கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்திலுள்ள ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து வரும் 5-ம்தேதி வரை நடைபெறும் விழாவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

பிரதான நிகழ்ச்சியான கட்டுத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் சுவாமிகள் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். ஏராளமானோர் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இன்று திருமலைராஜன் ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இதே போல் கொரநாட்டுக்கரூப்பூரிலுள்ள அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சிறப்பலங்காரத்தில் அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பிரதான விழாவான இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகிறது. இதே போல் திருமாந்துறையிலுள்ள யோகநாயகி அம்மன் சமேத அட்சியநாத சுவாமி கோயிலில் இந்த விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. தேரில் யோகநாயகி அம்மன் சமேத அட்சியநாத சுவாமி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். ஏராளமானோர் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதே போல் கும்பகோணம் சோமகலாம்பிகை அம்மன் சமேத பாணபுரீஸ்வரர் கோயிலில் இந்த விழாவையொட்டி திருத்தேரோட்டம் மாலை நடைபெற்றது. தேரில் சோமகலாம்பிகை அம்மன் சமேத பாணபுரீஸ்வரர் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமானோர் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

இதற்கான ஏற்பாடுகள் செயல் அலுவலர்கள் ம.ஆறுமுகம்,சி.கணேஷ்குமார் மற்றும் அந்தந்த கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE