எம பயம் போக்கும் கள்ளழகா..!

By வி. ராம்ஜி

மதுரையில் இருந்து உலகத்தையே அருளாட்சி செய்யும் கள்ளழகப் பெருமாள், தன்னை நாடி வருவோர் எவராயினும் அவருக்கு நல்லன எல்லாம் தந்து அருள் வழங்குவார் என்பது தெரியும். அந்த வகையில், எமதருமரும், பெருமாளை வழிபட்டு வரம் பெற்றிருக்கிறார் என்கிறது புராணம்.

செந்நிற மேனி, ஈர்க்கும் முகம், காந்தக் கண்கள், எடுப்பான நாசி, செம்பவள உதடு, முத்து போன்ற பற்கள்... மொத்தத்தில் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் அழகிய உருவம் என பல யுகங்களுக்கு முன்பு, அழகு பொருந்தியவராகத்தான் இருந்தார் எமதருமன் என்கிறது புராணம். ஆனால், தன் தேஜஸை இழந்து, கோர முகத்துடன் இன்றளவும் காட்சி தருகிறார் எமதருமன்.

ஏன் இப்படி? எதனால் மாறினார்?

தேவலோகப் பெண்களையே மயக்கும் பேரழகு பெற்றிருந்த எமதருமனைக் கண்டு, பயப்படுவதற்கு பதில் அவன் மீது மோகம் கொண்டன ஜீவராசிகள்! சில தருணங்களில், தன் அழகில் மயங்கிய தேவலோகப் பெண்கள் வீசும் காதல் வலையில் எமதருமன் சிக்கித் தவித்து மருகினாராம். இப்படி, காலதேவன் தனது கடமையை மறந்ததால் பூலோகத்தின் பாரம் கூடியது. அதாவது பிறப்பு நிகழ்ந்ததே அன்றி இறப்பென்று நிகழவே இல்லை. மனிதர்களுக்கு மரணமே இல்லாத நிலை ஏற்பட்டது.

இதை அறிந்த சிவனார், உடனே எமனை கயிலாயத்துக்கு அழைத்தார். அதன்படி வந்த காலனிடம் விளக்கம் கேட்டார். தன் அழகில் தேவலோகப் பெண்களே மயங்குகின்றனர் என வெட்கத்துடன் சொன்னார் எமன்.

அனைத்தையும் கேட்டறிந்த சிவபெருமான், தனது சக்தியால் எமதர்மனின் உருவத்தையே மாற்றி விட்டார். பிறகு, ‘’எமதர்மா, அதோ அந்தத் தடாகத்தில் உள்ள தெளிந்த நீரில் உனது உருவத்தைப் பார்!’’ என்றார்.

எமதர்மன் தடாகத்துக்குச் சென்றார். நீர்ப் பரப்பை உற்றுப் பார்த்தார். அதிர்ந்து போனார். சிவனாரிடம் ஓடோடி வந்தவர், ‘’ஸ்வாமி, அந்தத் தடாகத்துக்குள் கோர ரூபம் கொண்ட ஒருவன் ஒளிந்திருக்கிறான். அவனது கோரைப் பற்களும் கரிய நிறமும்... பார்க்க எனக்கே பயமாக இருக்கிறது. அகண்ட மீசையும் சிவந்த கண்களும், தலையில் கொம்புகளும் புஜ பலமும் கூடிய அவன் யார்?’’ என்று கேட்டார்.

இதைக் கேட்டு, கயிலையே குலுங்கும் அளவுக்குச் சிரித்தார் சிவனார். பிறகு, ‘’காலதேவா, நீ பார்த்தது உன் உருவத்தைத்தான். கலங்காதே!’’ என்றார். இதைக் கேட்டு மனம் சோர்ந்தார் எமதர்மன். நிலைகுலைந்து மருகினார். மீண்டும் ஒருமுறை சிவனாரை ஏறிட்டவர், ‘இடையில் புலித் தோல்; மேனியில் சுடுகாட்டுச் சாம்பலுடன் திகழும் இவரிடம் பேசிப் பயனில்லை!’ என்ற எண்ணத்துடன் பிரம்மனைத் தேடி சத்திய லோகம் சென்றார்.

அங்கு, ஓலைச் சுவடியில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் பிரம்மன். ஐந்து தலைகளில் ஒன்றை இழந்து நான்முகனாக திகழும் பிரம்ம தேவனைக் கண்டதுமே எமதர்மனின் மனதில் ஓர் அவநம்பிக்கை ஏற்பட்டது. ‘இவரே ஒரு தலையை இழந்து நிற்கிறார். இவரிடம் பரிகாரம் கேட்பது வீண்!’ என்று நினைத்தவர், நிறைவாக... திருமாலை தரிசிக்கக் கிளம்பினார்.

வைகுண்டத்தில், திருமகளிடம் அளவளாவியபடி இருந்தார் திருமால். இதைக் கண்டு, ‘மகிழ்ச்சியுடன் இருக்கும் தம்பதிக்கு இடையூறு செய்யக் கூடாது!’ என்று சிந்தித்த எமதர்மன், பூலோகம் சென்று தவம் செய்து இழந்த அழகை மீண்டும் பெறுவது என முடிவு செய்தார்.

பூலோகத்தில், தென் திசை நோக்கிப் பயணித்தார். வழியில் ஓர் இடம் மிகவும் எமதருமனைக் கவர்ந்தது.அங்கு,அந்த மலையடிவாரத்தில், திருமாலை நினைத்து, தவத்தில் மூழ்கினார். அதையடுத்து மகாவிஷ்ணு அவருக்குக் திருக்காட்சி தந்தார். திருமாலை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் எமன். ’’தாங்கள் தான் எனக்கு விமோசனம் தர வேண்டும்!’’ எனக் கெஞ்சினார்.

‘’வருந்தாதே எமதர்மா! உன் தலையில் முளைத்திருக்கும் கொம்புகள் மறைந்து போகட்டும். மாறாக, கொம்புகளுடன் கூடிய எருமை, உனக்கு இனி வாகனமாகும். அத்துடன், ஆயுள் நிறைவடைந்த உயிர்களை எமலோகம் கொண்டு வர உதவியாக பாசக் கயிறு ஒன்றும் தருகிறேன்!’’ என்றார்.

இதில் ஓரளவு மகிழ்ந்து நிம்மதியான எமதருமன், ‘’ஸ்வாமி, எனது கோரைப் பற்களும் மறைந்து, நான் பழைய பொலிவுடன் திகழ அருளவேண்டும்’’ என வேண்டினார்.

‘’காலதேவனே... நீ சத்தியலோகம் சென்றபோது பிரம்மனை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதால், இந்தக் கோர உருவமே உனக்கு நிலைக்கும்படி விதித்து விட்டார் பிரம்மன். பிரம்ம விதியை மாற்ற என்னால் முடியாது. ஆனாலும் வருந்தாதே! இந்தக் கோர உருவம், உலக உயிர்களிடம் உன் மீது பயத்தையும் கூடவே பக்தியையும் உருவாக்கும். உனது கோரைப் பற்கள் உலகில் நோய்நொடியை ஏற்படுத்தி, மரணத் தொழிலுக்கு உதவி செய்யும்!’’ என அருளினார் மகாவிஷ்ணு (ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களை எமனின் கோரைப் பற்கள் என்பர்).

‘இதுதான் தனது விதி’ என்பதை அறிந்து, ஒருவாறு ஆறுதல் அடைந்த எமன், ‘’ஸ்வாமி, எனக்கு அருள் புரிந்த தாங்கள் இங்கேயே நிரந்தரமாக எழுந்தருள்வதுடன், தங்களை வழிபடுவோருக்கு அருள் வழங்கி ஆசீர்வதியுங்கள்!’’ என வேண்டினான். அதற்குச் சம்மதித்த மகாவிஷ்ணு, சுந்தரராஜ பெருமாளாக அங்கு கோயில் கொண்டார்.

இந்த திருவிடமே இன்றைய அழகர் கோயில். ‘சுந்தரம்‘ என்றால் ‘அழகு’. எனவே, இந்தப் பெருமாளுக்கு ‘அழகர்’ என்ற பெயரும் சேர்ந்தது. இங்கு, தேவி- பூதேவி சமேதராக அருள்கிறார் மூலவர்.

பெருமாள் இங்கு கோயில் கொள்ள... அவரைத் தேடி மகாலட்சுமி வந்தாள். அவளையும் அங்கேயே தங்கும்படி வேண்டினார் எமன். அதற்கு இசைந்த திருமகளும், ‘கல்யாண சுந்தரவல்லி’ எனும் திருநாமத்துடன் பெருமாளின் திருக்கரம் பற்றி அங்கேயே குடிகொண்டாள். தன் தேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தரும் சுந்தரராஜபெருமாள், அனைவரின் மனதையும் கொள்ளை கொள்பவர் என்பதால்தான் இவருக்கு ‘கள்ளழகர்’ எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்!

இன்றும் எமதர்மர், அழகர் கோயிலுக்கு வந்து, இங்கு அர்த்தஜாம பூஜை செய்வதாக ஐதீகம். எனவே மதுரை கள்ளழகர் கோயிலுக்கு வந்து வேண்டினால், எம பயம் விலகும். நீண்ட ஆரோக்கியத்துடன் நோய் நொடியின்றி ஆயுள் பலத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்