திருப்போரூர் வந்தால் திருப்பம் நிச்சயம்!- சஷ்டி ஸ்பெஷல்

By வி. ராம்ஜி

சஷ்டி விரத நாளில்... திருப்போரூர் ஸ்ரீகந்த ஸ்வாமி திருத்தலத்தை அறிந்து உணர்ந்து, வணங்கிப் பலன்களைப் பெறுவோம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருப்போரூர் திருத்தலம். ஆனால் சென்னைக்கு அருகில் உள்ளது இந்தக் கோயில். சுமார் 700 வருடப் பழைமையான ஆலயம் எனும் பெருமை மிக்க திருத்தலம் இது.

அருணகிரிநாதர் இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானைத் தரிசித்து திருப்புகழ் பாடியிருக்கிறார். சிதம்பரசுவாமிகளும் வந்து முருகக் கடவுளைத் தரிசித்திருக்கிறார்.

தந்தை ஈசனைப் போலவே இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் கந்தபெருமான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் இல்லை. மாறாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300&க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.

முருகனுக்கு அப்பனுக்கே பாடம் சொன்னவன் என்றும் ஞானகுரு என்றும் பெயர்கள் உண்டு. திருப்போரூர் முருகப்பெருமான், மற்ற தலங்களைப் போல் அல்லாமல், ஸ்ரீபிரம்மாவுக்கு உரிய அட்சமாலையை கையில் ஏந்தியபடி, திருமாலைப் போல இடது கரத்தை தொடையில் வைத்தபடி சிவனாருக்கே உரிய அபய ஹஸ்த முத்திரையுடன் மும்மூர்த்திகளின் அம்சமாத் திகழ்கிறார்.

பிரளயத்தால் ஆறு முறை அழிவைச் சந்தித்து, ஏழாவது முறை கட்டப்பட்டதாம் இந்தக் கோயில். அதுவே இன்றளவும் நிலைத்து, கம்பீரத்துடன் காட்சி தருகிறது!

ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சந்நிதியில் இருந்து பார்த்தால், முன்னே தரிசித்துச் செல்பவர்களைப் பார்க்கமுடியாதபடி அமைக்கப்பட்டு உள்ளது.

எல்லாக் கோயில்களிலும் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கொடிமரம் அமைந்திருக்கும். ஆனால் இங்கே, கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது கொடிமரம்..

திருத்தணி, சுவாமிமலை தலங்களில் முருகக்கடவுளின் சந்நிதிக்கு எதிரில் ஐராவதம் எனும் வெள்ளை யானை வாகனமாக நிறுத்தப்பட்டிருக்கும். அதேபோல், மயில்வாகனனின் வாகனமாக, இங்கு ஐராவத யானை சிலையாக அமைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், வள்ளி தெய்வானைக்கு திருப்போரூர் திருத்தலத்தில் தனித்தனி சந்நிதி அமைந்துள்ளதும் வேறெங்கும் காண்பதற்கு அரிதான சிறப்பு!

முருகன் சந்நிதியின் கோஷ்டப்பகுதியில், பிரம்ம சாஸ்தா எனும் வடிவம் வைக்கப்பட்டு உள்ளது. இதை முருகனின் இன்னொரு வடிவம் என்று போற்றப்படுகின்றனர்.

திருப்போரூர் ஆலயத்தில், நவக்கிரக சந்நிதி இல்லை. மாறாக, கந்தஸ்வாமியைத் தரிசித்தாலே சகல கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்!

வைகாசி விசாகமும் தைப்பூசத் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. விசாக விழாவில், சுவாமிக்கு திருப்பாவாடை வைபவமும் தைப்பூசத் திருவிழாவின் போது தெப்போத்ஸவமும் சிறப்புற நடைபெறும்!

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள யந்திர முருகனை வழிபடுகின்றனர். மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இங்கு உள்ள அம்மனை வழிபடுகின்றனர். இங்கு வந்து வேண்டிக் கொண்டால், வேண்டியது விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை நிறைவேறியவர்கள், இங்குள்ள சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை செய்தும், அபிஷேகம் செய்தும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

ஸ்ரீமுருகன் சந்நிதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்கிறார்கள்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சமாக வழிபடுகின்றனர் பக்தர்கள். பிரணவ மந்திரப் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலடைத்தபோது, முருகனே படைப்புத்தொழில் செய்தார். இதனால் இவரை பிரம்மாவின் அம்சமாகவும் வழிபடுவதுண்டு. திருச்செந்தூர் போன்ற தலங்களில் விழாக்காலங்களில் சுவாமி, மும்மூர்த்திகளின் அலங்காரத்தில் எழுந்தருளுவார். இங்கு கந்தசுவாமி, மும்மூர்த்திகளின் அம்சமாகவே தினந்தோறும் காட்சி தருகிறார்.

கோயிலுக்கு அருகிலுள்ள சிறு குன்றில் கயிலாசநாதர், பாலாம்பிகை அம்பாள் கோயில்கள் உள்ளன.  முன்பு, முருகன் சிலை மட்டும் இருந்தது. பின்னர் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர்.

சிவாலயங்களில் அம்பாளுக்கும் பெருமாள் கோயில்களில் தாயாருக்கும் நவராத்திரி விழா சிறப்புற நடைபெறும். உமையவளின் மருமகள்களான வள்ளி தெய்வானைக்கும் நவராத்திரி விழா இங்கே கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த நாட்களில் வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்யப்படும்.

அதேபோல் சிவனாரைப் போல ஐப்பசி பௌர்ணமியில் முருகப்பெருமானுக்கு இங்கே அன்னாபிஷேகமும், சிவராத்திரி நாளில், இரவில் நான்கு கால பூஜையும் விமரிசையாக நடக்கிறது. இங்குள்ள அம்பிகை புண்ணியகாரணியம்மன் எனப் போற்றப்படுகிறாள்.

இந்தக் கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றி, இதையெல்லாம் தெரிவித்தார் முருகப் பெருமான். உடனே சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய ஆலயம் எழுப்பினார். மேலும் கந்தசுவாமியைப் போற்றி ஏராளமான பாடல்களைப் பாடினார். இவருக்கு இங்கு சந்நிதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை வைபவமும் விமரிசையாக நடைபெறுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழில் இந்தத் தலம் குறித்துப் பாடும் போது, சகல வேதங்களின் வடிவம் என கந்தபெருமானைப் போற்றுகிறார். இதனால் முருகக்கடவுளுக்கு வேத உச்சி யாக சுவாமி என்றும் பெயர் உண்டு. எனவே கல்வியில் சிறக்கவும் ஞானம் பெறவும் கந்தனை வேண்டுகின்றனர்!

கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இந்த வேளையில் கஜமுகன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன், அஜமுகி, தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். மாசி பிரம்மோற்ஸவத்தின் போது, முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும்.

கந்தசஷ்டி விரத நாளில், அல்லது செவ்வாய்க்கிழமையில், கிருத்திகை மற்றும் விசாக நட்சத்திர நாட்களில், திருப்போரூர் கந்தவேலனை, தரிசியுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்