கிருஷ்ணர் பயணம் செய்து கொண்டிருந்தார். மகாபாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடெங்கும் சண்டை சச்சரவு இல்லாமல் மக்களும் மன்னர் களும் அமைதியாக இருந்த சமயம் அது.
அப்போது உதங்கர் என்னும் முனிவர் வழியில் எதிர்ப்பட்டார். அவர் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பல ஆண்டுக் காலம் காட்டில் தவத்தில் மூழ்கியிருந்த அவர் நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்.
பல ஆண்டுகள் கழித்துக் கிருஷ்ணனைக் கண்டதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இருவரும் அன்போடு குசலம் விசாரித்துக்கொண்டார்கள். பல காலம் காட்டில் இருந்த உதங்கர் நாட்டு நடப்பு பற்றிக் கிருஷ்ணனிடம் கேட்டார். அப்படியே பேச்சு ஹஸ்தினாபுரம் பற்றித் திரும்பியது.
“கவுரவர்களும் பாண்டவர்களும் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டார் உதங்கர்.
இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்த கிருஷ்ணர், “உங்களுக்கு விஷயமே தெரியாதா?” என்று சொல்லிவிட்டுப் போரைப் பற்றியும் அதன் முடிவையும் சொன்னார்.
உதங்கருக்குப் பெரும் அதிர்ச்சி. “பீஷ்மர், துரோணர் எல்லாரும் செத்துப்போய்விட்டார்களா? கவுரவர்கள் எல்லாரும் செத்துவிட்டார்களா?” என்று கேட்டார்.
கிருஷ்ணர் மீண்டும் விவரமாகச் சொன்னார். சூதாட்டத்திலிருந்து தொடங்கிப் பொறுமையாக எல்லாவற்றையும் விளக்கினார்.
உதங்கருக்குக் கடும் கோபம். “கிருஷ்ணா, நீ இருந்துமா இப்படியெல்லாம் நடந்தது? நீ ஏன் தடுக்கவில்லை?” என்று கேட்டார்.
தன்னால் முடிந்த அளவு தடுத்துப் பார்த்ததாகவும் கவுரவர்கள் தன் பேச்சைக் கேட்கவில்லை என்றும் கிருஷ்ணர் சொன்னார்.
உதங்கர் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. “நீ நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். எனவே இந்தப் போருக்கும் இத்தனை கொலைகளுக்கும் நீதான் காரணம்” என்று சொன்னவர், “உன்னை சபிக்கப்போகிறேன்” என்றார்.
கிருஷ்ணர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நடந்தவை அனைத்தும் கடவுளின் விருப்பம். யாரும் அதைத் தடுத்திருக்க முடியாது என்று சொன்னார். முனிவர் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லை என்று நினைத்த கிருஷ்ணர் தன் விஸ்வரூபத்தைக் காட்டினார்.
விஸ்வரூப வரம்
பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கிய அந்தப் பேருருவைக் கண்டு உதங்கர் பிரமித்துப்போனார். திக்குமுக்காடினார். கண்களில் நீர் வழிய கைகளைக் கூப்பியபடி சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கினார்.
அடுத்த வினாடி கிருஷ்ணன் மீண்டும் தன் புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார். “கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு. நீ யாரென்று தெரியாமல் பேசிவிட்டேன்” என்று உதங்கர் கெஞ்சினார்.
அவர் கைகளை அன்போடு பற்றிக்கொண்ட கிருஷ்ணர், “உங்கள் கோபம் நியாயமானதுதான். உங்கள் நிலையில் இருந்திருந்தால் நானும் அப்படித்தான் பேசியிருப்பேன்” என்றார். தெய்வத்தின் திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது என்று மீண்டும் விளக்கினார். உதங்கர் புரிந்துகொண்டார்.
“அது போகட்டும். என்னுடைய விஸ்வரூபத்தைப் பார்த்த உங்களுக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். ஏதாவது கேளுங்கள்” என்றார் கிருஷ்ணர்.
அதெல்லாம் வேண்டாம் என்றார் முனிவர். கிருஷ்ணர் வற்புறுத்தினார்.
“நான் சுற்றிக்கொண்டே இருப்பவன். சில சமயம் தாகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது” என்றார் உதங்கர்.
கிருஷ்ணர் அதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தார்.
“தாகம் எடுக்கும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் கிடைக்கும். ஆனால் நான் எப்படித் தண்ணீரை அனுப்பினாலும் நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்றார் கிருஷ்ணர். உதங்கர் ஒப்புக்கொண்டார்.
நாட்கள் கடந்தன. உதங்கர் ஒரு முறை பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது அவருக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. அப்போது கிருஷ்ணனை நினைத்தார்.
கிருஷ்ணரின் திருவுள்ளம்
தொலைதூரத்தில் இருந்தாலும் உதங்கரின் எண்ணத்தை உணர்ந்த மாயக்கண்ணன் உடனே தேவேந்திரனைத் தொடர்புகொண்டார். உதங்கருக்கு தேவாமிர்தம் தரும்படி சொன்னார். தேவேந்திரன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “மனிதர்களுக்கு தேவாமிர்தம் தருவதில்லையே” என்றான். கிருஷ்ணரின் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்தான்.
“ஆனால் என் விருப்பப்படிதான் செல்வேன்” என்றான். கிருஷ்ணர் ஒப்புக்கொண்டார்.
இந்திரன் ஒரு புலையரின் வடிவத்தில் உதங்கரிடம் சென்றான். அழுக்கான உடல், அதைவிட அழுக்கான ஒற்றை ஆடை, பஞ்சடைந்த தாடி, மீசை, கையில் அழுக்குப் பிடித்த ஒரு தகரக் குவளை, பக்கத்தில் சொறி பிடித்த நாய். இந்தக் கோலத்தில் சென்றான். உதங்கரிடம் சென்று தகரக் குவளையை நீட்டினான்.
அருவருப்படைந்த முனிவர் அவனை விரட்டிவிட்டார். மாற்றுருவில் வந்த இந்திரன் வற்புறுத்தினான். முனிவர் கேட்கவில்லை. இந்திரன் சென்றுவிட்டான்.
உதங்கருக்கு மகா கோபம். கிருஷ்ணன் இப்படிச் செய்துவிட்டானே என்று வருந்தினார். எப்படியோ சமாளித்துச் சற்றுத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்று தாகத்தைத் தணித்துக்கொண்டார்.
வேறொரு நாளில் கிருஷ்ணன் மீண்டும் அவரது வழியில் எதிர்ப்பட்டார். உதங்கர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். புன்சிரிப்போடு நெருங்கிய கிருஷ்ணர், “என்ன முனிவரே, உங்களுக்காக இந்திரனிடம் தேவாமிர்தம் கொடுத்து அனுப்பினேன், நீங்கள் அவனை விரட்டிவிட்டீர்களே” என்றான்.
தவறை உணர்ந்த உதங்கர்
உதங்கருக்குத் தன் தவறு புரிந்தது.விஸ்வரூபம் காட்டிய பரந்தாமனே அனுப்பிய நீர் என்றால் யோசிக்காமல் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்ய விடாமல் உதங்கரைத் தடுத்தது எது? அவர் எவ்வளவு பெரிய ஞானி! எவ்வளவு பெரிய தவயோகி! ஆனால் ஏன் அவரால் கண்ணபிரான் அனுப்பிய அமிர்தத்தைக் குடிக்க முடியவில்லை?
ஒருவர் எவ்வளவு தவம் செய்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சாஸ்திரங்களைப் படித்துக் கரைத்துக் குடிக்கிறார் என்பதும் முக்கியமல்ல. புறத் தோற்றம் முக்கியமல்ல, தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம் என்பதுதான் தத்துவத்தின் பால பாடம். இதைத்தான் கிருஷ்ணர் உதங்கருக்கு உணர்த்தினார்.
உதங்கர் எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவருக்கு மனிதர்களிடத்தில் பேதம் பாராட்டும் தன்மை இருந்தது. தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் தன்மை இருந்தது. அது இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. இதைத்தான் கிருஷ்ணர் உணர்த்தினார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago