பூமிப் பிரச்சினை தீர்க்கும் திருச்சுழிநாதா..!

By வி. ராம்ஜி

பூமி சம்பந்தமான பிரச்சினைகள், சொத்து தொடர்பான வழக்குகள் எதுவாக இருந்தாலும்  திருச்சுழியில் கோயில் கொண்டிருக்கும் திருச்சுழிநாதனை வணங்கி கோரிக்கை வைத்தால் போதும்... அனைத்து சிக்கல்களையும் தீர்த்தருள்வார் இந்த சிவபெருமான்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சுழி எனும் புண்ணிய பூமி . பகவான் ஸ்ரீரமண மகரிஷி அவதரித்த, இயற்கை எழில் சூழ்ந்து,  ரம்மியமாக உள்ள அற்புத பூமியில் அமைந்துள்ளது ஸ்ரீதிருமேனிநாதர் திருக்கோயில்.

சுமார் 2,000 வருடப் பழமை மிக்க ஆலயம். சுயம்பு மூர்த்தமாக, லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் ஸ்ரீதிருமேனிநாதர். ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீமணக்கோலநாதர், ஸ்ரீகல்யாண சுந்தரர், ஸ்ரீதிருமேனிநாதர் என நான்கு யுகங்களில் நான்கு திருநாமங்களுடன் காட்சி தந்து அருளினாராம் சிவபெருமான். தற்போது கலியுகத்தில், திருமேனிநாதராக அருள் பாலிக்கிறார்.

பூமாதேவி, அரக்கர்களைக் கொன்ற பாவம் தீர, இங்கு வந்து தீர்த்தம் உண்டு பண்ணி, அதில் நீராடி சிவனாரை தவமிருந்து வணங்கி, பாப விமோசனம் பெற்றாள் என்கிறது ஸ்தல புராணம். எனவே, இங்கே உள்ள திருக்குளம் மகிமை வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

சிவபெருமானின்  தோழன் எனப் போற்றப்படும் சுந்தரமூர்த்தி நாயனார், இங்கு வந்து திருச்சுழிக்கு அருகில் மடம் ஒன்றில் தங்கினார். அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய சிவனார், 'நான் அங்கு இருக்க, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் சுந்தரா?' என்று கேட்டதுடன், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.

இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் காட்சி தர, பிரளய விடங்கர் எனும் பெயருடன் லிங்க மூர்த்தமாகக் காட்சி தருகிறார் சிவபெருமான். ஸ்தல விருட்சம்- புன்னை மரம்.

பூமாதேவி, இங்கு வந்து சிவ பூஜை செய்து, தன் பாவங்களில் இருந்து நிவர்த்தி அடைந்தாள். எனவே, இங்கு வந்து வழிபடுவோருக்கு, ஏழேழு ஜென்மப் பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்!  அதேபோல், திருமேனிநாதரை வழிபட்டால், நிலம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து, நிம்மதியாக வாழலாம். நிலத்தில் சிக்கல், விளைச்சல் குறைபாடு என இருந்தால், நிலத்தில் இருந்து மண் எடுத்து வந்து, சிவனாரின் சந்நிதியில் வைத்து வேண்டிக்கொண்டு பிறகு நிலத்தில் அந்த மண்ணைக் கலந்துவிட்டால், விவசாயம் செழிப்பதோடு, நிலம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்தும் விரைவில் விடுபடலாம் என்கின்றனர் பக்தர்கள்.

இங்கே, இந்தக் கோயிலில் துணைமாலையம்மன் எனும் அம்மன் சந்நிதி உள்ளது.  திருமண தோஷம் உள்ள பெண்கள், இங்கு வந்து அம்மனுக்கு மஞ்சள் சரடு வைத்து வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண பந்தம் ஏற்படும். துணைமாலை நாயகி சகாய முத்திரை காட்டி காட்சி தருவதால் 'சகாயவல்லி' என்றும் அழைக்கப்படுகிறார். பொதுவாக, அம்மனுக்குக் கீழே ஸ்ரீசக்கரம் அமைந்து இருக்கும். இங்கு அம்மன் சந்நிதியில் உள்ள அர்த்தமண்டபத்தின் மேல்விதானத்தில், ஸ்ரீசக்கரம் உள்ளது. இதனை 'ஆகாய ஸ்ரீசக்கரம்' என்று போற்றுகிறார்கள்.

மாசி மகம் மற்றும் மாசி மகா சிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகளும், விசேஷ ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

இந்தக் கோயிலில் ஏற்றப்படும் மோட்ச தீபம் விசேஷம். இறந்தவர்களின் திதி அல்லது அமாவாசை முதலான நாட்களில், இங்கு மோட்ச தீபம் ஏற்றினால், முன்னோர்கள் மோட்ச கதி அடைவார்கள். பித்ருக்களின் ஆசியும் நமக்குக் கிடைக்கும் என்பது  ஐதீகம்!

திருச்சுழிக்கு வந்து ஈசனை வணங்கினால், வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் ஏற்படும் என்பது சத்தியம்!

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்