மானாமதுரை அருகே 200 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய கிராம மக்கள்

By இ.ஜெகநாதன்


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மானாமதுரை அருகே கோச்சடையை அடுத்த அய்யனார்குளம் கண்மாய் கரையில் முத்தையா, கருப்பணன், பேச்சியம்மன், ராக்காயி, பத்திரகாளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் களதி உடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் 8-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது.

ஏனாதிக்கோட்டை, வன்னிக்குடி கிராம மக்கள் ஒன்றுகூடி சாமி கும்பிடுவது வழக்கம். மேலும் ஆடுகள் மீது தண்ணீர் ஊற்றும்போது சிலிர்த்து தரிசனம் தந்தால் மட்டுமே அவற்றை வெட்டுவர். ஓர் ஆடு சிலிர்க்காவிட்டால் கூட, வெட்டிய மற்ற ஆடுகளையும் சமைக்க எடுத்துச் செல்ல மாட்டர். மேலும் மொத்தமாக அனைத்து ஆடுகளையும் வெட்டி முடித்த பிறகே, அவரவர் தங்களது ஆடுகளை எடுத்துச் செல்வர். இதனால் கிராம மக்கள் பக்தியோடு, விரதம் இருந்து ஆடுகளை பலி கொடுக்கின்றனர்.

அதன்படி இன்று ஏனாதிக்கோட்டை, வன்னிக்குடி பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து சாமி கும்பிட்டனர். அவர்கள் முடிக் காணிக்கை செலுத்தி, 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைத்து ஆடுகளையும் வெட்டி முடிந்ததும் வீடுகளுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டனர். இந்தாண்டு ஏனாதிக்கோட்டை, வன்னிக்குடியில் இருந்து புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் குடியேறிய மக்களும் வந்து தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE