‘சரஸ்வதி தேவிக்கு கோயில் இல்லை... ஏன்?’விளக்குகிறார் காஞ்சி மகாபெரியவர்

By வி. ராம்ஜி

குழந்தைகள் நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண் பெற்றாலோ, கல்வி, கலைகேள்விகளில் எவரேனும் சிறந்து விளங்கினாலோ... அதை சரஸ்வதி கடாக்ஷம் என்று போற்றுவார்கள். கல்விக்கு அதிபதி, கல்விக் கடவுள் என்றெல்லாம் போற்றி ஆராதிக்கப்படும் சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் ஏன் இல்லை என்று காஞ்சி மகா பெரியவர், தெய்வத்தின் குரலில் அருளியிருக்கிறார்.

‘‘ஒரு விஷயத்தை ஆலோசிப்பதில் இன்னொன்று அகப்படுகிறது. சிவன், அம்பாள், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி என்று ஸதிபதிகளாக அவர்களின் உயர்வைச் சொல்லிக்கொண்டு போகும்போது, சட்டென்று பிரம்ம பத்தினியான சரஸ்வதி விஷயத்தை விட்டுவிட்டோமே என்று நினைவு வந்தது. பிரம்மா விஷயத்துக்குக் குறுக்கே அதைக் கொண்டு வராமல், எடுத்துக்கொண்ட விஷயத்தை நிலைக்குக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு அப்புறம் அதை எடுத்துக்கொள்ள நினைத்தேன்.

சரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண பிரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலைமடந்தை, அறிவுத் தெய்வம் என்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம். அவளைப் பற்றி ஸ்தோத்திரங்கள் மஹான்கள் பண்ணியிருப்பது கம்பர், ஒட்டக்கூத்தர், குமரகுருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக்கிறார்கள், அவற்றை ஓதுகிறோம். முத்துஸ்வாமி தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்களைப் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் ஸ்லோகங்கள் சொல்லி பிரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் ஸரஸ்வதிக்கு மட்டும் ஒன்றையும் காணோம்! தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோயில்.

(ஒட்டக்) கூத்தனுடைய ஊர்தான் கூத்தனூர். காமகோட்டத்தில் (காஞ்சி காமாக்ஷி ஆலயத்தில்) சரஸ்வதிக்கு ஸந்நிதி உண்டு. ஆனால் அதுகூட பிரம்ம பத்தினியான சரஸ்வதி இல்லை என்றும், ராஜராஜேஸ்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜ சியாமளையான மஹா சரஸ்வதி என்றும் ஒரு வித்தியாசம் சொல்வது உண்டு. சரஸ்வதிக்கு பிம்பம், ஸந்நிதியுள்ள மற்ற கோயில்களிலும் அவை முக்கியமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன. மொத்தத்தில், பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. ஆனால் பிரம்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, சரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லோரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளை துதிக்கக் கற்றுக்கொடுத்து விடுவதால், அது பசுமரத்தாணியாக மனதில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.

நியூஸ் பேப்பர் பாஷையில் சொன்னால், அவள் ‘பாப்புலர்’ தெய்வம்; பிரம்மா ‘அன் பாப்புலர்’ தெய்வம்! அன் பாப்புலர் தெய்வத்துக்குக் கோயிலில்லை என்றால் அது நியாயம். நல்ல பாப்புலாரிடி இருக்கிற தெய்வத்துக்கும் ஏன் அப்படியே இருக்க வேண்டும்?

இங்கேதான் நம்முடைய தேசாசாரம் வருகிறது. பாதிவ்ரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவிரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்கமாட்டார்கள். சரஸ்வதி, பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும் பதிவிரதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில்! அவள் எப்படிப் பதிக்குக் கோயில் இல்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.

அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மனுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய ட்யூட்டியும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள். ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோயில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டு விட்டு, தான் மட்டும் மஹிமை கொண்டாடிக்கொள்ள அவள் சம்மதிக்கமாட்டாள்! அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக்கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்திரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா லக்ஷ்மிகளுடன் அவளும் வந்து சரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு சரி. பதியை நீக்கி பொது ஸ்தலத்தில்

கோயில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்’’ என அருளியுள்ளார் காஞ்சி மகான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்