திருச்செந்தூர் எனும் க்ஷேத்திரம், புண்ணியத் திருத்தலமாகப் போற்றப்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. மைந்தனின் திருத்தலம் என்றாலும் இங்கே உள்ள அஷ்ட லிங்கங்கள் தனித்துவம் கொண்டவை. இந்த அஷ்ட லிங்கங்களில், பஞ்சலிங்கங்களுக்கு பூஜைகள் நடைபெறுவதில்லை.
ஏன் தெரியுமா.. உலக மக்களுக்காக கந்தபெருமான், பஞ்சலிங்கங்களுக்கும் நித்திய அனுஷ்டான பூஜைகளை மேற்கொள்கிறார் என்பது ஐதீகம்! .தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம் என்பார்கள். திருச்செந்தூர் திருத்தலமானது, தமிழகக் கோயில்களில் எப்போதும் எல்லாநாளும் கூட்டம் நிரம்பி வழியும் ஆலயம் எனும் பெருமைக்கு உரியது!
தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மன் மீது படையெடுத்தார்.
வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்து விட்டு, வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார்.
இந்தத் திருச்செந்தூருக்கு இன்னொரு பெயர் என்ன தெரியுமா. ஜெயந்திபுரம். ஜெயம் என்றால் வெற்றி.
அசுரனை அழித்து வெற்றி வாகை சூடிய தலம் என்பதால், ஜெயந்திபுரம் என்று இந்த ஊரின் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அதுமட்டுமா... வேல் கொண்டு சூரனை அழித்து ஜெயித்த வேலவனுக்கு ஜெயந்திநாதர் என்றே திருநாமம் அமைந்தது.அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சனான மயனை அழைத்தார். கோயிலை எழுப்பச் சொன்னார். அந்தக் கோயிலே திருச்செந்தூர் எனச் சிலாகிக்கிறது புராணம்.
வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் இது வியாழ பரிகார க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது. சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சூர சம்ஹாரம்’ என்பது பழமொழி. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகைக்கு அருகில் அமைந்துள்ள சிக்கல் திருத்தலம், அன்னை உமையவள் தன் மைந்தன் பாலனுக்கு, கந்தனுக்கு வேல் வழங்கி, ஆசி அளித்த ஒப்பற்ற பூமி.
ஓரெழுத்தந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, நிரோட்டக யமக அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், தசாங்க வகுப்பு, திருச்செந்தூர் தல புராணம், வழி நடைப்பதம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஏராளம்.
செந்திலாண்டவன் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேற்கு ராஜ கோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும். முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான், ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் அமைந்து உள்ளன.
இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்திரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர்.
செந்திலாண்டவருக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.
ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். எனவே இவரை எந்தத் தருணத்தில் தரிசித்தாலும் வாழ்வில் வெற்றியும் விடியலும் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.
இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் இல்லை. அருகில் தேவியரும் இல்லை. உலகுக்காக தந்தை சிவனாரை நோக்கி தபஸ் செய்யும் வேலவனைத் தரிசிப்பது மகா புண்ணியம். கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என விவரிக்கின்றன ஞானநூல்கள்!
முருகப்பெருமான் சந்நிதியில் கந்தவேளுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நம் பிரார்த்தனை முழுமை அடையும் என்பது ஐதீகம். அஷ்ட லிங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடைபெறாது. அடடா... என வருந்தவேண்டாம். ஏனெனில், பஞ்ச லிங்கங்களுக்கும் முருகப்பெருமானே பூஜை செய்கிறார் என்பது ஐதீகம்.
திருச்செந்தூரில் முருகப் பெருமான் ஐம்பெரும் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவருக்கு மஞ்சள் பட்டாடை- மஞ்சள் மலர் மாலை அணிவித்து நான்முகனாகவும்,
நீல மலர்கள்- நீல வண்ண ஆடைகளை அணிவித்து திருமாலாகவும், சிவப்பு நிற ஆடைகள்- சிவப்பு மலர்களை அணிவித்து அரனாகவும்,
வெண்பட்டு- வெண் மலர்களால் அலங்கரித்து மகேசனாகவும், பச்சை சார்த்தி சதாசிவனாகவும் போற்றப்படுகிறார். இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடை பெறுகின்றன. இது வேறு எந்த முருகன் கோயிலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு என்கிறார்கள் முருக பக்தர்கள்.
அதிலும் குறிப்பாக, மார்கழி மாதத்தில் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago