தி.மலையில் மே 5-ல் சித்ரா பவுர்ணமி திருவிழா: 362 கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு பணியில் 4,314 காவலர்கள்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 5-ம் தேதி சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெறுவதையொட்டி 362 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன; பாதுகாப்புப் பணியில் 4,314 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சித்ரகுப்தன் அவதரித்த நாள் என புராணங்கள் கூறும் சித்ரா பவுர்ணமி விழா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 5-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக, சித்ர குப்தனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்படும். மலையே மகேசன் என போற்றப்படும், திரு அண்ணாமலையை கிரிவலம் சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். சித்ரா பவுர்ணமி வரும் 4-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்கு தொடங்கி 5-ம் தேதி நள்ளிரவு 11.33 மணிக்கு நிறைவு பெறுகிறது.

1,958 சிறப்பு பேருந்துகள்: சித்ரா பவுர்ணமியை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், சுவாமி தரிசனம் செய்யவும் மற்றும் 14 கி.மீ., தொலைவு உள்ள அண்ணாமலையை கிரிவலம் செல்லவும் 15 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது. வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 1,958 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இப்பேருந்துகள் மூலமாக 5,875 நடைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மற்றும் வேலூர் மார்க்கத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 27 ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக 8 சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வேக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

13 தற்காலிக பேருந்து நிலையம்: இதையொட்டி நகரை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 11 ஆயிரம் கார்களை நிறுத்தக்கூடிய வகையில் 55 இடங்களில் கார் நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தற்காலிக பேருந்து நிலையம், கார் நிறுத்துமிடம் ஆகியவற்றில் குடிநீர், கழிப்பறை, விளக்குகள், மேற்கூரைகள், காவல் உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் கிடையாது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து நகரை இணைக்கும் பகுதிக்கு வருவதற்கு 123 கட்டணம் இல்லாத பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 2.5 கி.மீ., தொலைவுக்கு ரூ.30, அதற்கு கூடுதலாக தொலைவுக்கு ரூ.50 என தனிநபரின் ஆட்டோ பயணம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

88 மருத்துவக் குழுக்கள்: அண்ணாமலையார் கோயில் வளாகம் உள்பகுதியில் இருதய நோய் சிறப்பு மருத்துவருடன் 3 மருத்துக் குழுக்கள், நகரம் மற்றும் கிரிவல பாதையில் 85 மருத்துவக் குழுக்கள் இடம்பெறும் முகாம் அமைக்கப்பட உள்ளது. மேலும் 15 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் 10 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்புப் பணியில் 4,314 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

15 தீயணைப்பு வாகனங்களுடன் 184 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதி என கண்டறியப்பட்டுள்ள 7 இடங்களில் 50 வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசல் மற்றும் குற்றச் செயலை கண்காணிக்க அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் 165 கண்காணிப்பு கேமராக்கள், கிரிவல பாதையில் 197 கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 362 கண்காணிப்பு மேகராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரம் மற்றும் 34 இடங்களில் உதவி முகாம்கள் அமைக்கப்படுகிறது.

110 இடங்களில் அன்னதானம்: கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மீட்டு, அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலரை உடனடியாக அடையாளம் காணும் வகையில் அவர்களது கையில் பெயர் மற்றும் செல்போனுடன் கூடிய பட்டை கட்டப்பட உள்ளது. ஆட்சியரகம், மாவட்ட காவல் அலுவலகம், தீயணைப்பு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் என நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, சித்ரா பவுர்ணமி நிகழ்வுகள் கண்காணிக்கப்படுகிறது. கோயில் வளாகம், கிரிவல பாதை, தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் கார் நிறுத்துமிடங்கள் என 192 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்படுகிறது. 83 இடங்களில் கழிப்பறை வசதி செய்து தரப்பட உள்ளது. தூய்மைப் பணியில் 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 110 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் தின்பண்ட பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை மூலம் 14 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE