மதுரை சித்திரைத் திருவிழாவை நித்தியானந்தா பார்க்கிறாரா? - அன்றாட நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் சீடர்கள்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: கைலாசா நாட்டில் வசிக்கும் நித்தியானந்தா, மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை நேரலையில் கண்டு ரசிப்பதாக கூறப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (மே 2) சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் 6 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 12 ஆயிரம் பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவில் வளாகங்களில் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் மற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இதனால், மதுரையே திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. திருவிழா நாட்களில் நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே அம்மன் சன்னதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள், கைலாசாவில் இருந்தவாறே நித்யானந்தா சித்திரை திருவிழாவை காண்பதற்கான நேரடி வசதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சித்திரை திருவிழாவை நேரலையில் காண்பதற்கு வசதியாக அன்றாடம் சித்திரைத் திருவிழாவை வீடியோ எடுத்து வருகிறார்கள். சாமி வீதி உலா, நித்தியானந்தா ஆசிரமம் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் அருகே உள்ள சன்னதி வீதி வழியாகதான் வந்துசெல்லும். இதனால், அன்றாட வீதி உலாவை அவரது சீடர்கள் வீடியோ எடுத்து வருகிறார்கள்.

இதன்மூலம், நித்யானந்தா சித்திரை திருவிழாவை நேரலையில் கண்டு ரசிக்கலாம் என நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஆசிரமம் சார்பில் திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. ஏராளமானோர் அந்த பிரசாதத்தை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE