பழநி மலைக்கோயிலில் சித்த மருத்துவப் பிரிவு தொடக்கம் - பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அலோபதி மருத்துவ மையத்தைத் தொடர்ந்து, சித்தா முதலுதவி மருத்துவ மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் மலைக்கோயிலில் இரண்டு மருத்துவர்களுடன் அலோபதி மருத்துவ மையம் உள்ளது.

மலைக்கோயிலுக்கு படிப்பாதை மற்றும் யானைப் பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் கால்வலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வு போன்றவற்றுக்காக இம்மருத்துவ மையத்தில் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுச் செல்கின்றனர். இதைத் தொடர்ந்து, சித்த மருத்துவப் பிரிவை நாடும் பக்தர்களுக்காக, மலைக்கோயிலில் ரோப் கார் நிலையம் அருகே புதிதாக சித்தா முதலுதவி மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முதலுதவி அளிக்கப்படும். இதற்காக, மூன்று சித்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கால்வலி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை அவர்கள் அளிக்கின்றனர். மேலும், ஒரு நாளுக்குத் தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE