தெய்வத்தின் குரல்: இறைவா இரண்டு தவறுகளை மன்னித்துவிடு

By செய்திப்பிரிவு

பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார்.

“திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே. நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம்.

போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போன பிறவியில் உன்னை நமஸ்கரித்திருந்தால் அப்போதே எனக்கு மோக்ஷம் கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்த ஜன்மாவில் நமஸ்கரிக்கமாட்டேன் என்றது ஏன் தெரியுமா? இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்து விட்டேன் அல்லவா? அதனால் நீ இனி எனக்குப் பிறவியே தரமாட்டாய். மறு ஜன்மாவே இல்லாதபோது, அப்போது உனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும்? இப்படியாகப் போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தை மன்னித்துவிடு.”

ஜனன மரணச் சக்கரத்திலிருந்து விடுதலை

இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப்பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும், அவர் நம்மை ஜனன மரணச் சக்கரத்திலிருந்து விடுவித்துவிடுவார். நம் பாவங்களை எல்லாம் போக்கி முக்தி தந்து விடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்துவ சமத்காரத்தில் பாடியவரில்லை. அவர் பழுத்த அனுபவசாலி, எனவே அவரது வார்த்தையைப் பரிபூர்ணமாக நம்பி நாமும் ஈசுவரனிடத்தில் சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம். நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியே கிடைக்கும் சந்தேகமில்லை.

நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்பார்கள். தண்டம் என்றால் கழி அல்லது கோல் என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். அப்படியே இந்தச் சரீரம் நமதல்ல, இது ஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை ‘அது தண்டமாகி விட்டது’ என்கிறோம். அப்படித் தண்டமான வஸ்துதான் நம் சரீரம்.

இதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கிவிட்டு, அதற்கு அடையாளமாக ஈசுவரன் முன் இந்தச் சரீரத்தைக் கீழே போடவேண்டும். அதுதான் தண்டம் சமர்ப்பிப்பது. ஜுரம் வந்தால் நம் சரீரத்தால் நிற்கவும் நடக்கவும் முடிகிறதில்லை. இந்த ஜன்மாவே பெரிய ஜுரமாக வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்சார ஜுரத்தை புரிந்துகொண்டு, அதற்கு அடையாளமாக ஸ்வாமியின் முன் தண்டகாரமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.

பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்தேன்

‘நாம் செய்கிறோம்’ என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே சதாகால நமஸ்காரம். அந்த அனுபவம் நமக்கு சித்திக்காதபோதிலும் ஈஸ்வர சன்னிதியிலாவது, அப்படிப் பாவித்து வணங்கித் தரையோடு தரையாக எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம். ‘பொறுப்பை உன்னிடமே பூரணமாகக் போட்டேன்’ என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில் போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்று வைத்துக் கொண்டால்கூட ஸ்வாமி தம் பங்கைக் குறைத்துக்கொண்டு விடுவார். இதில் அரைகுறைக்கு இடமே இல்லை. நம்முடைய நல்லது, பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும் அவரிடம் தள்ளுவதற்கு வெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளி நமஸ்காரம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் நம் பாரம் அனைத்தையும் கிருபா சமுத்திரமான சுவாமியே ஏற்று அனுக்கிரகிப்பார்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்