சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தோப்பறைகள் விற்பனை மும்முரம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் சுவாமி மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தோப் பறைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், குடும்ப நலனுக்காகவும் பக்தர்கள் கள்ளழகர் வேடமணிந்து சுவாமி மீதும், மக்கள் மீதும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியின்போது, பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கரகோஷம் எழுப்பியபடி சுவாமியை நோக்கி தோப்பறை தோல் பைகளில் சேகரித்து தண் ணீரை பீய்ச்சி அடிப்பர்.

இந்த நிகழ்ச்சியைக் காண வைகை ஆற்றில் லட்சக்கணக் கானோர் திரள்வர். இதையொட்டி ஆற்றில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டுக்கான அழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடங்குகிறது. மே 5-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடு களை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன. இந் நிலையில், மதுரை சுற்றுவட்டார மக்களும் சித்திரைத் திருவிழாவை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், அவர்களின் குழந்தைகள், கள்ளழகர் போல் ஆடைகளை தைத்து உடுத்தி நகர்வலம் வருவர். அதுபோல், கள்ளழகர் மீதும், விழாவில் பங்கேற்கும் மக்கள் மீதும் பக்தர்கள் தோப்பறைகளில் தண்ணீரை சேகரித்து பீய்ச்சியடிப் பார்கள்.

தற்போது விழா நெருங்கும் நிலையில், தோப்பறைகளையும், கள்ளழகர் ஆடைகளையும் பக்தர்கள் ஆர்வமாக வாங்கி வருகிறார்கள். இவற்றை பாரம்பரியமாக தொழிலாளர்கள் விரதம் இருந்து தயாரித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக மதுரை தேர்முட்டி பகுதி, சந்நிதி தெருக் களில் தோப்பறை பைகள் விற் பனை நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE