மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 10 மணியளவில் சுவாமி சந்நிதி கம்பத்தடி மண்டபம் முன்பு, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். காலை 10.35 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்பு நேற்று மாலை கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிம்மவாகனத்தில் மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்தனர்.

ஏப். 30-ல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 2-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே 3-ல் தேரோட்டம் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் ஆ.அருணாசலம் தலைமையில் கோயில்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE