புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள காசிக்கு வீசம் பெற்ற திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலில் சங்கராபரணி ஆதிபுஷ்கரணி விழா இன்று தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.
நவகிரகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் குரு பகவான் செல்லும் ராசியை கணக்கிட்டு, அந்த ராசிக்குரிய நதிகளுக்கு புஷ்கரணி விழா நடத்தப்படும். மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் சனிக்கிழமையான இன்று பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, மேஷ ராசிக்குரிய நதியான, புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா தொடங்கியது. சங்கராபரணி ஆறு வடக்கு நோக்கி பாய்வதாலும் கங்கைக்கு நிகரானது என்பதாலும் இந்த புஷ்கரணி விழா மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த விழாவின் தொடக்கமாக நேற்று அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மாலை மிருத்சங்கிரஹணம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், சப்தநதி தீர்த்த கலச பிரதிஷ்டை, முதல் கால யாகம், பூர்ணாஹீதி தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து இன்று காலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. காலை 6.30 மணிக்கு கோ பூஜை, 7 மணிக்கு புஷ்கர கொடியேற்றம் நடந்தது. பின்னர் 2-வது கால சப்தநதி கலச பூஜை சிறப்பு யாகம், யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை 9.41 மணிக்கு புஷ்கரம் பிறக்கும் நேரத்தில் சப்தநதி தீர்த்த கலசாபிஷேகம் நடந்தது.
செங்கோல் ஆதீனம் 103-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்யஞான தேசிய பராமாச்சாரிய சுவாமிகள் புனித நீராடலை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பங்கேற்றார். உற்சவரான கெங்க வராகநதீஸ்வரர் மேளதாளம் முழங்க பல்லக்கில் எழுந்தருளி ஆற்று புனித நீராடல் படித்துறையில் எழுந்தருளினார். படித்துறையில் உற்சவரின் சூலாயுதம் பூஜைக்கப்பட்டு பின் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து மீண்டும் சூலாயுதத்துடன் உற்சவர் கோயிலில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடினர். பக்தர்களுக்கு அண்ணதானமும் வழங்கப்பட்டது. பிற்பகலில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படித்துறையில் மலர்த்தூவி வழிபட்டார்.
மே 3-ம் தேதி வரை இவ்விழா நடைபெறும் நிலையில், நாள்தோறும் காலை 9 மணிக்கு மகாயாகம் நடக்கிறது. மேலும், தினமும் வேதபாராயணம், திருமுறை பராயணமும், மாலையில் 6 மணிக்கு கங்கா ஆரத்தியும் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் கலைநிகழ்சசி நடைபெறுகிறது. பக்தர்களுக்கு வழிகாட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் வகையில் வழிகாட்டிகளுக்கு பச்சை வேட்டி, வெள்ளை சட்டை சீருடையும் அளிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி நீராடும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி படித்துறைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஷவர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்காக உயிர்காக்கும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். விழாவிற்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல காசிவிசுவநாதர் கோயிலில் இருந்து கெங்க வராக நதீஸ்வரர் கோயிலுக்கு பிஆர்டிசி மினி பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோடை வெயிலில் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க பந்தல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2 ஷிப்டுகளாக 200 போலீஸாரும், கூடுதலாக ஐஆர்பிஎன் காவலர்களும், தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள், மருத்துவ குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
விழாவுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த அந்தந்த பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆங்காங்கே மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதி புஷ்கரணி விழாவையொட்டி ‘‘இந்து தமிழ் திசை’’ நாளிதழின் 24 பக்க புஷ்கரணி சிறப்பு தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பக்கதர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆதி புஷ்கரணியின் போது நீராடினால் புண்ணியம் கிடைக்கும்; முன்னதாக புனித நீராடலைத் தொடங்கி வைத்த செங்கோல் ஆதீனம் பக்தர்களுக்கும் ஆசி வழங்கினார். அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்துள்ளதையொட்டி சங்கராபரணியில் ஆதி புஷ்கரணி விழா தொடங்கியுள்ளது.
ஆற்றில் புனித நீராடி, கெங்க வராக நதீஸ்வரரை வணங்கி பக்தர்கள் அருள் பெறலாம். குருபகவான் 12 நாட்களும் அருள்புரிவார் என்பதால் அந்த நாட்களில் புனித நீராடி தங்களுடைய பாவங்களை போக்கி இன்பமாக இருக்க நல்ல பலன்கள் கிடைக்கும். புஷ்கரம் என்பது பிரம்ம கமலத்தில் உள்ள ஒரு தீர்த்தம்.
இந்த தீர்த்தமானது குருபகவானின் தவத்துக்கு இணங்கி 12 தினங்கள் குருபகவானோடு இருப்பதாக ஐதீகம். ஆகையினால் தான் இந்த12 தினங்கள் மட்டும் மிகச்சிறப்பாக புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது. புனித நீராடலால் பாவங்கள் நீங்கும். மகிழ்ச்சி கிடைக்கும். புண்ணியங்கள் நம்மை வந்து சேரும்" என்றார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
21 days ago
ஆன்மிகம்
21 days ago