ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்: ரெங்கமன்னருக்கு சாற்றுவதற்காக  மங்கல பொருட்கள் அனுப்பி வைப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தின்போது ரெங்கமன்னருக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புமிக்கதாகும். இங்கிருந்து திருப்பதி பிரம்மோற்சவம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம் ஆகியவற்றில் ஆண்டாள் சூடி கலைந்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் அணிந்து பெருமாள் காட்சியளிப்பது வழக்கம்.

அதன்படி நாளை மறுநாள் (ஏப்.19) ஸ்ரீ ரங்கத்தில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை இன்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக ஸ்ரீ ஆண்டாளுக்கு பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ ரங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, சுதர்சன் பட்டர், ரமேஷ் பட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE