தெய்வத்தின் குரல்: முதலாவது அன்பு அடுத்தது உண்மை

By செய்திப்பிரிவு

சகல மக்களும் அநுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு (அஹிம்ஸை). அடுத்தது உண்மை (சத்தியம்).

சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள்.

மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். மனத்தில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக நாம் நடந்து கொண்டோமானால் அடுத்த ஜன்மத்தில் நமக்குக் கொடுத்த பேச்சு சக்தியைப் பறித்துக்கொண்டுவிடுவார் – அதாவது மிருக ஜன்மத்தையே நமக்குத் தருவார்.

சத்தியத்துக்கு லட்சணம்

பூரண அஹிம்சைக்கு நமது சாஸ்திரத்திலேயே சில விலக்குகள் இருக்கின்றன. தர்மத்துக்காக யுத்தம் செய்யும்போதும், யாகயக்ஞங்களில் பலி தருகிற போதும் அஹிம்ஸைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது என்று நினைப்பீர்கள். ஆனால், சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது. அதைக் கொஞ்சம் விளக்குகிறேன்.

ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து வாஸ்தவமாகவே ஒருவருடைய மனசு கொதிக்கிறது. அவன் இந்தத் தப்பையெல்லாம் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறான். ‘அவன் அந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். இவனுக்கு வாக்கும் மனசும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவன் அப்படிச் சொல்வதால் இவனுக்கும் பிரயோஜனமில்லை. ஜனங்களுக்கும் பிரயோஜனமில்லை. தப்புச் செய்கிறவர்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வியர்த்தமாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதைச் சத்தியம் என்று சொல்வதற்கில்லை.

ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சத்தியமாகிவிடுமா? ஆகாது.

ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே.

அசத்தியத்தைச் சொல்லாதே

ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதாகவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் ஹிதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

‘சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே,’ என்பது பெரியோர் வாக்கு.

காமமும் குரோதமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. க்ஷேமத்தையே உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக காம, குரோதங்களற்ற நல்ல மனம் வேண்டும்.

ஆக சத்தியத்தின் லட்சணம், மனமும் வாக்கும் ஒன்றுபட்டிருப்பது; மனம் சுத்தமாக இருப்பது; வாக்கு சாந்தமாக, ஹிதமாக இருப்பது. மொத்தத்தில் தனக்குச் சித்த சுத்தியையும் பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது.

சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்றுவிட்டால் அதற்கு ஓர் அவாந்தரப் பிரயோஜனம் உண்டு – அதாவது அந்த சத்தியசந்தன் உத்தேசிக்காமலே ஒரு பிரயோசனம் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே யதார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும். இதற்குத் திருஷ்டாந்தமாக ஒரு கதை சொல்கிறேன்.

திருக்கடவூரில் அபிராமி பட்டர் என்று அம்பாளின் பரம பக்தர் இருந்தார். அவர் அம்பாளையே நினைத்துப் பரவசமாகும்போது உன்மத்தரைப் போலப் பிதற்றுவார். இதைப் பற்றி சரபோஜி ராஜாவிடம் யாரோ துஷ்பிரசாரம் செய்தார்கள். ‘அபிராமிபட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார்’ என்று ராஜாவிடம் கோள் சொல்லிவிட்டார்கள். சரபோஜிக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் தோன்றியது. ஒரு நாள் சரபோஜி திருக்கடவூரில் அம்பாளைத் தரிசிக்க வரும்போது, அங்கே தன்வசமிழந்திருந்த பட்டரிடம், ‘இன்றைக்கு என்ன திதி?’, என்று கேட்டான். அன்றைக்கு அமாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே, அரசரிடம், இன்று பௌர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, “அப்படியா! சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம்” என்று தலையைத் தூக்கினான்.

அப்போது வாஸ்தவமாகவே ஆகாயத்தில் பூரண சந்திரன் வந்து நின்றது, அபிராமி பட்டர் சத்தியத்திலேயே ஊறியிருந்ததால், தவறிப்போய் அவர் அசத்தியத்தைச் சொன்னபோது, அம்பாளே தன் தாடங்கத்தைக் கழற்றி ஆகாயத்தில் வீசீ, பூரண சந்திரனாக ஜொலிக்கச் செய்தாள்.

மகான்கள் செய்கிற ஆசீர்வாதம் அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்துவிடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும். இது சத்தியமாக இருப்பதன் அவாந்தரப் பிரயோஜனம். ஆனால், தான் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதன் பொருட்டாக ஒருவரும் சத்தியத்தை அநுஷ்டிக்கக் கூடாது. உத்தேசமில்லாவிட்டால்தான் இந்தச் சக்தி தானாக வருமே ஒழிய உத்தேசித்துவிட்டால் அப்புறம் அது ‘அவாந்தர’மே இல்லை.

தெய்வத்தின் குரல் முதல் பகுதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்