காரைக்கால் அம்மையாரின் ஜென்ம நட்சத்திரமான பங்குனி சுவாதியை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
காரைவனம் என்றழைக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில், வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரை, காரைக்காலை அடுத்த நாகப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.
சிவனடியார் வேடத்தில்: ஒருசமயம் பரமதத்தர் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர் தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, அவரது வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று தயிர் கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவர் கொடுத்தனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார், அம்மையாரை வாழ்த்திச் சென்றார்.
பின்னர், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தருக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார். மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்தனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தர். அம்மையார் செய்வதறியாது திகைத்து, மற்றொரு அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, மேலிருந்து அம்மையார் கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவருக்குக் கொடுத்தார்.
» கும்பகோணம் அய்யனார் கோயில் பகுதியில் சாலை அமைக்கும் பணி தீவிரம்
» கும்பகோணம் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கோலாகலம்
முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தர், இது ஏது? என்றார். அம்மையார் நடந்ததை கூறினார். எனினும், பரமதத்தர் அதனை நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தர், ''நீ மனிதப்பிறவி இல்லை; தெய்வப்பெண். உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது'' என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய பாண்டிய நாடு சென்றார்.
பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்ற பரமதத்தர் அங்கு வேறொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார் பரமதத்தர். பாண்டிய நாட்டில் பரமதத்தர் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாடு சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர், தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி பெற்றார்.
திருப்பதிகம்: தொடர்ந்து, அம்மையார் இறைவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் சென்றார். இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார், “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார்.
அவ்வாறே அருளிய இறைவன், அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு இறைவன் தன் திருவடிக் கீழ் அம்மையார் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற அம்மையார், 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருக்கலானார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அமர்ந்த நிலையில் அம்மையார்: அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். காரணம், பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், அம்மையே அமர்க! என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.
மாங்கனியின் மகிமை: முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான். இங்குள்ள இறைவனுக்கு மாங்கனியுடன் பட்டுத்துணி சாற்றி வழிபடும் பக்தர்கள், ஸ்வாமி வீதி உலாவைத் தொடர்ந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாங்கனிகளை வாரி இறைக்கின்றனர். இவ்வாறு இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அமுது படையலில் தயிர் சாதம்: சிறு வயது முதல் சிறந்த சிவ பக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி சென்றார். சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன் சிவபெருமானுக்கு பறிமாறினார். எனவே மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதி உலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றைய தினம் ஸ்வாமி ஊர்வலத்தின்போது பக்தர்கள் பலரும், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்குவர்.
- சங்கர் தர்மராஜ்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago