கும்பகோணம் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கோலாகலம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் நாச்சியார் கோயிலிலுள்ள வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழாவை ஒட்டி தாயார் கோ ரத புறப்பாடு நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி திருத்தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நிகழாண்டு கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. ஏப்ரல் 8-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் தாயார் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான கடந்த ஏப்ரல் 1-ம் தேதி உள்பிரகார கல்கருட சேவையும், வீதியுலாவும், அதிகாலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தாயார் பெருமாளோடு கோ ரத புறப்பாடு நடைபெற்றது. தேரில் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் தக்கார் கோ. கிருஷ்ணகுமார், செயல் அலுவலர் பா.பிரபாகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE