ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர செப்புத் தேரோட்டம் கோலாகலம்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காலை செப்புத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் தினசரி பல்வேறு அலங்காரங்களில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சனிக்கிழமை ரெங்கமன்னார் கருட வாகனத்திலும், ஆண்டாள் அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நேற்று இரவு ரெங்கமன்னார் தங்க குதிரை வானத்திலும், ஸ்ரீ ஆண்டாள் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை 6:30 மணி ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் 7 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் செப்புத்தேரில் எழுந்தருளினர்.

அதன்பின் 7:20 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் "கோவிந்தா, கோபாலா" என்ற கோஷம் முழங்க நான்கு ரத வீதிகள் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தது. இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன்பின் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE