மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோயிலில் தேரோட்டம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: மகாவீரர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதையொட்டி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்சித்தாமூரில் உள்ள சமண மதத்தினரின் வழிபாட்டுத் தலமான பார்சுவநாதர் சுவாமி கோயிலில் 10 நாள் சிறப்பு பெருவிழா கடந்த 28-ம் தேதி தொடங்கியது.

அன்று காலை 7 மணிக்கு மூலவர் பகவான் ஸ்ரீ 1008 பார்சுவநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு நாத்திமங்கலம் தர்ப கொடி நிறுவுதலும், இரவு 8 மணிக்கு கொடியேற்று விழாவும் நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் மூலவர் பார்சுவநாதருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பார்சுவநாதர் எழுந்தருளினார்.

மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடம் ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சர்யமகா சுவாமிகள், இளைய பட்டம் ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சர்யவர்ய சுவாமிகள் ஆகியோர் தேரினை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து, இன்று காலை பல்லக்கு, முன் இரவு குதிரை வாகனம், நாளை தேவேந்திர வாகனம், இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது. நாளை மறுநாள் மகா கலஷாபிஷேகம், துவஜா அவரோ ஹணம் நிகழ்வைதொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE