ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நாளை ஆண்டாள் - ரெங்கமன்னார் கல்யாண வைபவம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை (ஏப்.5) ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதையடுத்து திருக்கல்யாணத்தின்போது ஆண்டாளுக்கு அணிவிப்பதற்காக, திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் அணிந்த பட்டு வஸ்திரம் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டது.

108 வைணவத் தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், ஆண்டாள் என இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரிய தலம். பெருமாளுக்கு தொடுத்த பூமாலையை, தனது தந்தை பெரியாழ்வாருக்கு தெரியாமல் தினமும் ஆண்டாள் சூடி மகிழ்வது வழக்கம். சிறுவயது முதலே கண்ணன் மீது மையல் கொண்ட ஆண்டாள் மார்கழி மாதத்தில் கண்ணனை நினைத்துருகி திருப்பாவை பாடி பாவை நோன்பிருந்தார். அதன் பலனாக பங்குனி உத்திர நாளில் ஸ்ரீஆண்டாள்- ரெங்கமன்னாரை கரம் பிடித்ததாக ஐதீகம்.

அதனடிப்படையில் தான், மார்கழி மாதத்தில் அனைத்து வைணவ தலங்களிலும் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை இசைக்கப்படுகிறது. அதேபோல் திருப்பதி பிரம்மோற்சவம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரைத் தேரோட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஆண்டாள் சூடிக் கலைந்த மாலை, பட்டு வஸ்திரம் ஆகியவை அணிந்து பெருமாள் காட்சி தருகிறார்.

அதேபோல, ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் கள்ளழகர் உடுத்தி களைந்த பட்டு வஸ்திரமும், திருக்கல்யாணத்தின்போது திருப்பதி பெருமாள் உடுத்தி களைந்த பட்டு வஸ்திரம் ஆகியவற்றை ஸ்ரீ ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் -ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தையொட்டி நேற்று காலை திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் உடுத்தி களைந்த பட்டு வஸ்திரத்தை தேவஸ்தான அதிகாரிகள் ஆண்டாள் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE