பைபிள் கதைகள் 64: கடவுள் அனுப்பிய கடைசி அரசர்

By அனிதா அசிசி

ஸ்ரவேலின் முதல் அரசனாகக் கடவுளால் தேர்ந்தடுக்கப்பட்டவர் சவுல். ஆனால், கடவுள் அவரைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, சாமானிய ஆயனாக இருந்த தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீது, கோலியாத் என்ற மாவீரனை எதிர்த்துச் சண்டையிட்டு வீழ்த்தி இஸ்ரவேலர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். அடுத்து தாவீதின் மகன் சாலமோன் அரசனாக ஆனார். கடவுளிடமிருந்து ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொண்டு மிகச் சிறந்த கவிஞராக விளங்கிய அவரும் தன் தனிமனித பலவீனத்தால் வீழ்ச்சி கண்டார்.

எரிக்கப்பட்ட எருசலேமும்

பாபிலோன் சிறையும்

சாலமோனின் மறைவுக்குப் பின், இஸ்ரவேல் இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று வடக்கு ராஜ்ஜியம், மற்றொன்று தெற்கு ராஜ்ஜியம். சாலமோனின் வாரிசுகளால் ஆளப்பட்ட தெற்கு ராஜ்ஜியத்தில் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரமக்கள் வாழ்ந்துவந்தார்கள். இது சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது. இஸ்ரவேலின் பத்து கோத்திர மக்கள் வாழ்ந்துவந்த வடக்கு ராஜ்ஜியம் சுமார் 250 ஆண்டுகள் நிலைத்திருந்தது. ஆனால், பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் கற்பனைக் கடவுளர்களை வழிபட்டனர். எருசலேம் தேவாலயத்தை எல்லாவிதத்திலும் களங்கப்படுத்தினர். தீர்க்கதரிசிகளை அனுப்பி கடவுள் இஸ்ரவேலர்களை எச்சரித்துத் திருத்த முயன்றார். ஆனால், கடவுளின் தூதுவர்களாகிய அவர்களது வார்த்தைகளைக் கேட்க இஸ்ரவேலர்கள் தயாராக இல்லை. கண்மூடித்தனமாகக் கற்பனை உலகில் வாழ்ந்தார்கள். கோபம் கொண்ட கடவுள் அசீரியரின் படையெடுப்பை அனுமதித்தார்.

இதனால் போரில் சரணடைந்த இஸ்ரவேலர்களை பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாரின் படையினர் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அடுத்துவந்த சில ஆண்டுகளில் நேபுகாத்நேசாரால் எருசலேம் நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. எருசலேம் நகரின் கோட்டைச்சுவர்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. அதன் வாசல் கதவுகள் எரிக்கப்பட்டு சாம்பலாய்ப் போயின. பாதுகாப்பு அரண் ஏதுமில்லாத நிலையில் அதன் பின்னர் இஸ்ரவேல் தேசமே யாருமின்றி வெறிச்சோடிக்கிடந்தது.

பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர்களில் பலர், உலகைப் படைத்த கடவுளாகிய யகோவாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களைக் கடவுள் கைவிடவில்லை. சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் முன்பு இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த அந்தத் தேசத்துக்கு அவர்களை மீண்டும் கொண்டுவரப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்தார்.

சோதனைகளைக் கடந்து விடுதலை

பாபிலோன் சிறையில் இருந்தபோது கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்த இஸ்ரவேலர்கள் பல சோதனைகளை எதிர்கொண்டார்கள். பாபிலோன் அரசன் நேபுகாத்நேசார் உத்தரவின்படி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவர் நெருப்புச் சூளைக்குள் வீசப்பட்டார்கள், ஆனால் கடவுள் அவர்களை உயிருடன் வெளியே அழைத்து வந்தார். அதன் பின்னர் பெர்சியர்கள் பாபிலோனைக் கைப்பற்றினார்கள். அப்போது மற்றொரு விசுவாசியான தானியேல் சிங்கங்களின் கூண்டுக்குள் வீசப்பட்டார். ஆனால், சிங்கங்கள் அவரை உண்ணவரும் முன் கடவுள் அவற்றின் வாயைக் கட்டிப்போட்டு அவரையும் பாதுகாத்தார்.

இறுதியில் இஸ்ரவேலர்களின் கடவுள் சக்தி வாய்ந்தவராக இருப்பதை அறிந்து பெர்சிய அரசனாகிய கோரேஸு இஸ்ரவேலர்களை விடுதலை செய்தார். பாபிலோனுக்குக் கைதிகளாக இழுத்துச்செல்லப்பட்டுப் பெரும் துன்பங்களை அனுபவித்தாலும் கடவுள் தங்களைக் கைவிட மாட்டார் என்று நம்பிய இஸ்ரவேலர்கள் சுமார் 70 ஆண்டுகள் பாபிலோன் சிறையிலிருந்து விடுதலை கிடைத்த பின் தங்கள் சொந்த தேசமாகிய இஸ்ரவேலுக்கு நெகேமியாவின் தலைமையில் திரும்பி வந்தார்கள். எருசலேமுக்குத் திரும்பிவந்த கையோடு, அழிந்து கிடந்த தங்களின் நகரின் நிலைகண்டு வருந்தி அழுதனர். முதல்வேலையாகத் தங்களைக் காத்து ரட்சித்த பரலோகத் தந்தையாகிய யகோவாவின் ஆலயத்தை மீண்டும் கட்டத் தொடங்கினார்கள். ஆலயம் எழுப்புவதை எதிரிகள் பலமுறை தடை செய்தபோதும் சுமார் 22 ஆண்டுகள் முயன்று அந்தப் பேராலயத்தைக் கட்டி முடித்தார்கள்.

இறுதி அரசர்

பேராலயத்தைக் கட்டி முடித்த பின் தங்கள் நகரத்தின் மதில்களைக் கட்டத் தொடங்கினார்கள். இதைக் கண்ட இஸ்ரவேலர்களின் எதிரிகள், “விரைந்துசென்று இஸ்ரவேலர்களைக் கொன்றொழித்து அவர்கள் தங்கள் நகரத்தின் மதில்களைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்துவோம்” என்று புறப்பட்டார்கள். இதை உளவறிந்த நெகேமியா, நகரத்தைப் புனரமைக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு ஈட்டிகளையும் கொடுத்து, “எதிரிகளைக் கண்டு பயப்படாதீர்கள். உங்கள் சகோதரர்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் மனைவியரின் பொருட்டும், உங்கள் வீடுகளைக் காக்கவும் போர் புரியுங்கள்” என்று நம்பிக்கை தந்தார்.

இதனால் இஸ்ரவேல் மக்கள் துணிவுடன் எதிரிகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்தார்கள். அல்லும் பகலும் ஆயுதங்களைத் தயாராக வைத்துக்கொண்டு, நகரின் மதில்களைக் கட்டியெழுப்புவதில் முழு மூச்சாக ஈடுபட்டனர். அதனால் 52 நாட்களுக்குள் எருசலேமின் மதில்கள் கட்டி முடிக்கப்பட்டன. இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லி மக்கள் அனைவரும் கோட்டைக் கொத்தளம் அமையப்பெற்ற பாதுகாப்பான நகரத்துக்குள் பயமின்றி வாழத் தொடங்கினர். நெகேமியாவும் குருவாகிய எஸ்றாவும் கடவுளுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்பித்தார்கள்.

மக்களும் பாவத்தை அறிக்கையிட்டு திருச்சட்டத்தின்படி வாழ உறுதி பூண்டார்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல, திருச்சட்டத்தைக் கற்பித்துவந்த குருக்கள், மக்களை ஒடுக்கும் அதிகார பீடமாக மாறினார்கள். அந்நியர்களை அவர்கள் அனுமதித்தார்கள். அந்நியனாகிய பெர்சிய அரசன் மீண்டும் இஸ்ரவேலை ஆளத் தொடங்கினான். இஸ்ரவேலர்கள் அவனுக்குச் சேவை செய்து வாழ வேண்டிய நிலை உருவானது. அந்தத் தருணத்தில் “ஒரு புதிய அரசரை அனுப்புவேன், அவர் உங்களுக்குச் சமாதானத்தையும் மீட்பையும் கொண்டுவருவார்” என்று தீர்க்கதரிசியின் வழியாக வாக்குக்கொடுத்தார் கடவுள். அவருக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். அவரே ரட்சகரான இயேசு.

(நிறைவடைந்தது)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்