திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்.10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் கம்பத்தடி மண்டபத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

பின்னர் விழா நாட்களில் தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்கக் குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

ஏப்.5-ம் தேதி பங்குனி உத்திரத்தையொட்டி பவுர்ணமி பூஜை, தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்.6-ம் தேதி இரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை நடைபெறும். அடுத்த நாள் இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறும்.

ஏப்.8-ம் தேதி பகல் 12.20 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறும். இத்திருக்கல்யாணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் வந்து பங்கேற்பர்.

ஏப்.9 காலை 6 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். ஏப்.10-ல் தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE