மதுரை | கோயில் யானைகள் நினைவாக ரூ.80 லட்சம் மதிப்பில் நினைவு மண்டபங்கள்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருவிழாக் காலங்களில் சாமி முன்பாக உலா வருவதற்காக கோயில் நிர்வாகம் சார்பாக அங்கயற்கண்ணி, பார்வதி, அவ்வை ஆகிய மூன்று யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

அங்கயற்கண்ணி யானை 2007-ஆம் ஆண்டு உயிரிழந்தது. தற்போது மீனாட்சி அம்மன் கோயிலில் பார்வதி யானை மட்டுமே உள்ள நிலையில், உயிரிழந்த அங்கயற்கண்ணி யானைக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் நிர்வாகம் சார்பாக சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.

அதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் இருந்த அவ்வை யானையும் கடந்த 2012-ம் ஆண்டு உடல் நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தது. இந்த நிலையில், கோயில் வளாகத்திற்குள் உள்ள பசு மடத்தில் அவ்வை யானைக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காக திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பாக சுமார் 30 லட்சத்து 67 ஆயிரத்து 56 ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தப் பணிகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கோயில் யானைகளுக்கு 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது, பக்தர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE