உ
யிர் என்னும் சொல் ‘உய்’ என்னும் வேரிலிருந்து தோன்றியதாகக் கணக்கு. உய்தல் என்றால் வாழ்தல் என்று பொருள். ‘உய், உய்’ என்னும் சீழ்க்கை ஒலியோடு மூச்சிழுப்பு நிகழ்கிறது. மூச்சிழுத்தல்தான் ஒருவர் வாழ்ந்திருப்பதற்கான அடையாளம். மூச்சிழுக்கும் செயலுக்கு உயிர்த்தல் என்று பெயர். பெருமூச்சு விடுவதை நெட்டுயிர்த்தல் (நீளமாக உயிர்த்தல்) என்று சொல்வது இப்போது அற்றுப் போய்விட்ட வழக்கு. பிராண வாயு என்று வடமொழி குறிப்பது தமிழில் உயிர் வளி என்று வழங்கப்படும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது மூச்சிழுத்து வாழ்ந்திருப்பது எதுவோ அது உயிர்.
உய்தல் என்ற சொல்லுக்குக் கடைத்தேறுதல் என்றும் பொருள். கடைத்தேறுதல் என்றால் விடுதலை பெறுதல். இந்த அடிப்படையில் பார்க்கும்போது உய்வடையத்தக்கது எதுவோ, அதாவது விடுதலை பெறத்தக்கது எதுவோ அது உயிர். மூச்சிழுத்து வாழ்தல் என்ற நடைமுறை பற்றி வந்த பெயராக இருந்தாலும் சரி, விடுதலை பெறுதல் என்ற இலக்கு பற்றி வந்த பெயராக இருந்தாலும் சரி, உயிர் என்ற பெயர் உயிருக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. நல்லது.
இப்போது ஒரு கேள்வி எழும்: உயிர் ஏன் விடுதலை பெற வேண்டும்? ஏனென்றால் அது கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. எதனால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது? உடம்பால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. கட்டுவதால் உடம்புக்கு யாக்கை என்று பெயர்.
‘யாக்கை நிலையாமை’ திருமந்திரத்தின் ஓர் அதிகாரத் தலைப்பு. அதில் இடம்பெறும் பாடல் இது:
சீக்கை விளைந்தது; செய்வினை மூட்டுஇற்ற;
ஆக்கை பிரிந்தது; அலகு பழுத்தது;
மூக்கினில் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே (திருமந்திரம், 147)
நெஞ்சில் சளி கட்டிக்கொண்டது; உய் உய்யென்ற ஒலியோடு மூக்கின் வழியாகச் சென்று வந்துகொண்டிருந்த சீழ்க்கை ஒலி மூச்சடைப்பின் காரணமாக இப்போது ஆவென்று திறந்து கிடக்கும் வாய் வழியாகச் செல்லத் தொடங்கிவிட்டது. உடம்பு செயல்படுவதற்கு வாட்டமாக இதுவரையிலும் மடங்கியும் நிமிர்ந்தும் எழுப்பி நிறுத்திய மூட்டுகள் இற்றுப்போய்த் தங்கள் இசிவை இழந்து விறைத்துக்கொண்டன. எலும்புகளோ, சுக்குபோலச் சுருங்கிப்போன வயதான உடம்பின் எளிய சுமையையும் தாங்க முடியாமல் வலுவிழந்து இளகிப் போயின. உயிரை அதுவரையிலும் இறுக்கமாகக் கட்டி வைத்திருந்த உடம்பின் கட்டுமானம், தளர்ந்து, கட்டுவிட்டுப் போயிற்று. அதுவரையிலும் விளைந்து கொண்டிருந்த சீழ்க்கை ஒலி இப்போது விளையாமல் போனதைப் பற்றிச் சுற்றி நின்றவர்கள் ஐயம் கொண்டார்கள்; கிடப்பில் கிடந்தவரின் மூக்கில் கைவைத்துப் பார்த்தார்கள்; ஐயம் தெளிந்தார்கள்; முடிந்தது கதை என்று முட்டாக்குப் போட்டு மூடினார்கள். காட்டுக்குக் கொண்டுபோய்ச் சுட்டார்கள் அல்லது இட்டார்கள். நீத்தார் கடன் என்று காக்கைக்குப் பிண்டம் வைத்துக் கணக்கை முடித்தார்கள். காக்கைக்கே (காப்பதற்கே) வந்தேன் என்றானாம் ஒருவன். ஆமாம், நீ காக்கைக்கே (காக்கைக்குப் பிண்டம் செலுத்தும்பொருட்டும் காக்கையால் கொத்தித் தின்னப்படும் பொருட்டுமே) வந்தாய் என்றானாம் மற்றொருவன். யாக்கையில் தொடங்கிக் காக்கையில் முடிகிறது எல்லாம்.
உடலின் நிலையற்ற தன்மை
உயிரைத் தனக்குள் யாத்துக்கொள்வதால் உடம்புக்குப் பெயர் யாக்கை என்றால், உயிரைத் தனக்குள் குடி இருத்திக் கொள்வதனால் உடம்புக்குக் கூடு என்றும் குடம்பை என்றும் பெயர்.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு (குறள் 338)
என்பது வள்ளுவம். உடம்புக்கும் உயிருக்கும் இடையில் இருக்கிற தொடர்பு முட்டை ஓட்டுக்கும் அதன் உள்ளிருக்கும் பறவைக் குஞ்சுக்கும் இடையிலான தொடர்பைப் போன்றது. ஓடு பறவையை அடைத்து வைத்திருக்கிறது. பக்குவம் பெற்ற நாளில் ஓட்டுக் கூட்டை உடைத்துக்கொண்டு பறவைக் குஞ்சு வெளியேறுகிறது.
அஞ்சாமல் கூடுவிட்டு வா
“ஓட்டோடு கொண்டிருக்கும் பழக்கக் கதகதப்பு காரணமாக ஓட்டை உடைத்துப் போக மனமில்லாமல் ஒருவேளை என் ஆவி மறுகினாலும் மறுகும். அப்போது என் ஆத்தாள் அபிராமி! என் முன் வந்து, ‘உனக்கு நான் புகல்! அஞ்சாமல் கூடு விட்டு வா!’ என்று உன் வளைக்கை அமைத்து எனக்கு அருளி, என்னை விடுவி!” என்று அபிராமியை வேண்டுகிறார் அபிராமி பட்டர். அடைத்துக் கட்டுவதற்குப் பயன்படுவதால் உடம்பைப் பை என்று சொல்வது சித்தர் வழக்கம்.
காயப்பை ஒன்று; சரக்குப் பலஉள;
மாயப்பை ஒன்றுஉண்டு; மற்றுமோர் பைஉண்டு;
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே
(திருமந்திரம் 2122)
பலசரக்குக் கடையில் பலசரக்கு வாங்கிப் பையில் இட்டுக்கொண்டு வருகிறோம். வீட்டுக்கு வந்ததும் பையை அவிழ்த்துச் சரக்கைப் பிரிக்கிறோம்; பயன் கொள்கிறோம். ஆனால் நம்மில் ஒவ்வொருவரிடமும் காயப்பை என்று ஒரு பை இருக்கிறது. அதனுள் பலசரக்கும் இருக்கிறது. அந்தப் பையை நாம் பிரித்ததும் இல்லை; உள்ளிருக்கும் பலசரக்கைப் பயன்கொண்டதும் இல்லை. காயப்பை நம்மைப் பொறுத்தவரை உள்ளீடு ஒன்றுமில்லாத மாயப் பை. காயப் பைக்குள் இருப்பதையே அறியாதவர்களே! காயப் பை என்கிற மாயப் பைக்குள் மற்றுமொரு பை இருப்பதை அறிவீர்களா? அதனுள் ஒளிந்திருப்பது என்ன என்று ஏதேனும் குறிப்பு உண்டா உங்களுக்கு? ஐயன்மீர்! ஒருவேளை நீங்கள் இவ்வளவு காலம் தேடித் திரிந்தது அதுவாகவும் இருக்கலாம். பையிருப்பு என்ன என்பது பையைப் பிரித்துப் பார்த்தால்தானே தெரியும்? பிரித்துப் பார்ப்பதற்குள் காயப்பைக்குள் நின்ற கள்வன் போகும் காலம் வந்தது என்று புறப்பட்டுவிட்டால் என் செய்வீர்கள்? மாயப் பை என்று நினைத்தது பயன்கொள்ளப்படாமலே மண்ணாகிப் போகும். அறியும் வழி தெரியாமல் மயங்கி இருந்ததுதான் மிச்சம் என்றாகும்.
இது யார் வேலை?
மானுட வாழ்வு என்ன வாழ்வு என்றால், கட்டுமானத்துக்குள் சிக்குவதற்கும் கட்டவிழ்ந்து வெளியேறுவதற்கும் இடைப்பட்ட வாழ்வே மானுட வாழ்வு என்க. எனில் ஓர் உயிரைக் கட்டுமானத்துக்குள் பற்றுவிப்பதும் கட்டவிழ்த்து அதை முற்றுவிப்பதும் யார் வேலை?
உடல் என்னும் கட்டுமானத்துக்குள் உயிரைச் சிக்க வைக்கிறவன் இறைவன். கட்டுமானத்துக்குள் சிக்கிச் சீரழிந்து, தடுமாறி இறுதியில் அறிவன அறிந்து, தன் சீர் உணர்ந்து, பக்குவம் பெற்று வரும்போது, உயிரின் கட்டவிழ்த்து அதை முற்றுவிக்கிறவனும் இறைவன். உய்வு தேடி அலையும் உயிருக்கு உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி அதை உய்யக் கொண்டான் இறைவன். ‘வடசொல் மட்டுமே அவனை உணர்த்தும் என்பார் அறிக: திருமூலரின் தமிழ்ச் செய்கை தொடர்ந்து காண்போம்.
(தொடர்ந்து உயிர் வளர்ப்போம்)
கட்டுரையாளர்:arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago